விம்பிள்டன்: 8-வது முறையாக பெடரர் சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில், குரோஷியாவின் மரின் சிலிச்சை தோற்கடித்தார்.
லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்-5’ சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 6வது இடத்தில் உள்ள குரோஷியாவின் மரின் சிலிச் மோதினர்.ஒரு மணி நேரம், 41 நிமிடம் நீடித்த போட்டியில், அபாரமாக ஆடிய பெடரர் 6-4, 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, கோப்பை வென்றார். தவிர இவர், விம்பிள்டனில் 5 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கடைசியாக 2012ல் கோப்பை வென்றிருந்தார்.
இது, விம்பிள்டனில் பெடரர் வென்ற 8வது (2003-2007, 2009, 2012, 2017) பட்டம். இதன்மூலம், விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் அதிக முறை கோப்பை வென்ற வீரர்கள் பட்டியலில் பிரிட்டனின் வில்லியம் ரென்ஷா (7 முறை, 1881-1886, 1889), அமெரிக்காவின் பீட் சாம்பிராஸ் (7 முறை, 1993-1995, 1997-2000) ஆகியோரை முந்தி முதலிடம் பிடித்தார். இதன்மூலம் பெடரர், தனது 19வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். தவிர, அதிக வயதில் (35) விம்பிள்டன் பட்டம் வென்ற வீரரானார்.

LEAVE A REPLY