விம்பிள்டன் டென்னிஸ் தொடக்கம்: ஆன்டி முர்ரே, சிமோனா ஹாலப் வெற்றி

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மிகவும் மதிப்பு வாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நேற்று தொடங்கியது.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, 135-ம் நிலை வீரரான கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் பப்ளிக்கை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் 44 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆன்டி முர்ரே 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் 12-ம் நிலை வீரரான பிரான்சின் சோங்கா, 221-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் கேமரன் நார்ரியை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 23 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சோங்கா 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

20-ம் நிலை வீரரான ஆஸ்தி ரேலியாவின் நிக் கிர்ஜியோஸ், 70-ம் நிலை வீரரான பிரான்சின் பியர்-ஹியூஜஸ் ஹெர்பர்ட்டை எதிர்த்து விளையாடினார். இதில் ஹியூஜஸ் ஹெர்பர்ட் 6-3, 6-4 என முன்னிலை வகித்த போது இடுப்பு வலி காயத்தால் அவதிப்பட்ட கிர்ஜியோஸ் ஆட்டத்தில் இருந்து விலகினார். இதனால் ஹியூஜஸ் ஹெர்பர்ட் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் ஜப்பானின் நிஷி கோரி, பிரான்சின் பெனோயிட் பேர், ஸ்பெயினின் ராபர்டோ பவுதிஸ்டா அகுட் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப் 6-4, 6-1 என்ற நேர் செட்டில் 129-ம் நிலை வீராங்கனையான நியூஸிலாந்தின் மரினா எரகோவிச்சையும், 10-ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் 7-6, 6-4 என்ற நேர்செட்டில் 54-ம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்சையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

LEAVE A REPLY