விடுதலை புலிகள் கேட்டதை ஒருபோதும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை

இந்நாட்டின் இளைஞர் யுவதிகள் வீதிகள் தோறும் கொலை செய்யப்பட்ட யுகமொன்று மீண்டும் ஏற்படாதிருப்பதற்கு இம்முறை தேர்தலில் தெளிவான தீர்மானமொன்றை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தம்பதெனிய, நாரம்மல திவிநெகும சந்தை வளாகத்தில் இன்று (2020.07.27) முற்பகல் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றிய பிரதமர், அன்றைய பயங்கரவாத யுகத்தில் நாட்டில் சுமார் 60 ஆயிரம் படித்த, புத்திசாதுர்யம் மிக்க இளைஞர்களை நாடு இழக்க நேரிட்டதாக குறிப்பிட்டார்.

பாரியளவிலான பட்டதாரிகள் இந்த பயங்கரவாதத்தின் போது கொலை செய்யப்பட்டதுடன், அதில் 4 ஆயிரத்து 210 பேர் குருநாகல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அன்று நாட்டில் நிலவிய நிலை தொடர்பில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு செய்வதற்கும், சாட்சி வழங்குவதற்கும் தான் உள்ளிட்ட குழுவினர் முன்வந்ததாக சுட்டிக்காட்டிய பிரதமர் தமது அரசாங்கத்தின் கீழ் ஒருபோதும் இவ்வாறானதொரு நிலை ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

பின்னர் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு வடக்கு கிழக்கை பிரித்துக் கொண்டு தனி அரசாங்கமொன்றை கட்டியெழுப்புவதற்கு முயற்சித்தாலும் அந்த முயற்சியை தோற்கடிக்க எமது அரசாங்கத்திற்கு முடியுமானதாயிற்று.

அன்று யுத்தம் காரணமாக நிறைவேற்றிக் கொள்ள முடியாதவற்றை இன்று ஜனநாயகத்தின் முகத்தை காட்டி பெற்றுக் கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சித்தாலும் பிரபாகரன் கேட்டதை ஒருபோதும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

பயங்கரவாதம், யுத்தம் என்பவற்றுக்கு மாறாக இளைஞர் யுவதிகளுக்கு புதிய கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் தொழில் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான வாய்ப்பை அதிகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து அவர்களது எதிர்காலத்தை வெற்றிகரமான நிலைக்கு கொண்டு செல்வதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் செய்யக்கூடிய அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுவதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.