விஜய் இல்லையென்றால் நான் இல்லை: ஜெய் பெருமிதம்

விஜய் இல்லை என்றால் நான் இங்கு இல்லை என்று அஜித் ரசிகர் பெருமிதமாக கூறியிருக்கிறார்.

விஜய் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான படம் ‘பகவதி’. இதில் விஜய்க்கு ஜோடியாக ரீமா சென் நடித்திருந்தார். தம்பியாக ஜெய் நடித்திருந்தார். காமெடி வேடத்தில் வடிவேலு நடித்திருந்தார். ஏ.வெங்கடேஷ் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி 15 வருடம் ஆன நிலையில், விஜய் ரசிகர்கள் சமூக வலை தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

இப்படத்தில் விஜய் டீக்கடை நடத்தி தம்பி ஜெய்யை படிக்க வைப்பார். ஜெய், காதல் விவகாரத்தில் கொல்லப்படுவார். ஜெய்யின் அறிமுகப் படமான பகவதியில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இப்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்தாலும், அறிமுகமே விஜய்யின் தம்பி என்பதில் சிறப்புதான்.

இந்நிலையில் ஜெய் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எனது சினிமா வாழ்வில் 15 வருடங்களை இன்று நிறைவு செய்கிறேன். இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உங்களின் ஆதரவு இல்லாமல் எதுவுமே நடந்திருக்காது. எல்லோருக்கும் நன்றி’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் ஜெய்.

என் மீது நம்பிக்கை வைத்து, இப்படத்தில் தம்பியாக நடிக்க வாய்ப்புக் கொடுத்ததற்கு நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இப்போது இங்கே இல்லை’ என விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜெய்.

அஜித்தின் தீவிர ரசிகனான ஜெய், அவரைப் போலவே பைக் ரேசில் கலந்துக் கொண்டு, அஜித்தை பின் பற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY