விசேட நிபுணர்களின் வரைபு அறிக்கையை வெகுவிரைவில் சமரிப்பிக்கப்படும் – சுமந்திரன்

புதிய அரசியலமைப்பு தொடர்பிலான விசேட நிபுணர்களின் வரைபு அறிக்கையை வெகுவிரைவில் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 10 வருடங்கள் பூர்த்தியாகின்றன. அதனை முன்னிட்டு பொரளை பொது மயானத்தில் இன்று காலை இடம்பெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசியலமைப்பு தொடர்பிலான நிபுணர்களின் அறிக்கை கடந்த வருடம் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி அரசமைப்புச் சபையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில்தான் நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.

புதிய அரசியலமைப்புக்கான வரைபு இன்னும் தயாரிக்கவில்லை. ஆனால், வரைபை போன்ற நிபுணர்களின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனை வெகுவிரைவில் நாம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்க்கட்சிகள் எதிர்ப்புக்களை வெளியிடுவதற்காக நாம் எமது செயற்பாட்டை ஒருபோதும் நிறுத்திவிட மாட்டோம்.” என கூறினார்.