விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமாருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

நடைபெற்று முடிந்துள்ள பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளின் படி கோட்டாபய அரசு மிகவும் பலம் அடைந்துள்ளது.தமிழ் மக்கள் தற்போது கடும் நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் கஜேந்திரகுமார் அணியும் விக்னேஸ்வரன் அணியும் எம்முடன் ஒன்றாக இணையாது விட்டாலும் பரவாயில்லை தமிழ் மக்கள் நலன் சார்ந்து செயற்பட நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்.

யாழ்ப்பாணம் கந்தரோடையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் ஒன்றிணையாது விட்டாலும் பரவாயில்லை ஒற்றுமையாக மனப்பூர்வமாக செயற்பட வேண்டும்.வார்த்தைகளால் மட்டும் அல்லாது மனபூர்வமாக ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

நான் எமது கட்சியுடன் இணையுங்கள் என்று கூறவில்லை.மாறாக மக்கள் நலனுக்காக தற்போதைய சூழ்நிலையில் ஒற்றுமையாக செயற்பட முன்வாருங்கள் என்றே அழைப்பு விடுக்கின்றேன்.

இது நடைபெற வேண்டும். வெறுமனே மக்களுக்கு நான் ஒற்றுமையாக செயற்பட தயாராக இருக்கின்றேன் என ஒருவருக்கு ஒருவர் காட்டிக்கொள்ளாமல் உண்மையிலேயே ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்றார்.