விக்கியின் கேள்வியால் தடுமாறும் ஷாம் குழு! – எஸ்.கிருஷ்ணகுமார்!

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்திருக்கின்றார்.

விக்னேஸ்வரன் தானும் குழம்பாமல், மக்களையும் குழப்பாமல் இருப்பது முக்கியமானது என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரனுக்குப் பதிலளிப்பதற்கு அவரும் முற்பட்டிருந்தாலும், விக்கி எழுப்பிய கேள்விகளுக்கான பதிலை அதில் காணமுடியவில்லை.

இந்த நிலையில் விக்கிக்கு தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராஜா பதில் அளிப்பார் எனவும், பதிலறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பு சட்டத்துறைக்குப் பொறுப்பான ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்கி எழுப்பியிருக்கும் கேள்வி ஆதாரபூர்வமானதாக இருப்பதாலும், தர்க்க அடிப்படையில் அமைந்திருப்பதாலும், அதற்கு உடனடியாகப் பதிலளிப்பதற்கு தமிழரசுத் தலைமை தடுமாறுவது தெரிகின்றது. அவர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக தனிப்பட்ட ரீதியாக அவர் தலைமைப்பதவிக்கு ஆசைப்பட்டார் என்ற வகையில் துரைராசசிங்கம் வெளியிட்ட அறிக்கை மக்கள் மத்தியில் எடுபடவில்லை.

தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை மற்றும் அதன் தலைமையை விமர்சித்து, முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடந்த புதன்கிழமை வெளியிட்டிருந்த கேள்வி- பதில் அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், துரைராசசிங்கம் துரைராஜசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியை விக்கி எதிர்பார்த்ததாகவும், அது கிடைக்காததால்தான் தலைமையை விமர்சிப்பதாகவும் சொல்லியிருக்கின்றார். இவ்வாறு சொல்லியிருப்பதன் மூலம், விக்கி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அவர் நழுவிக்கொண்டுள்ளார்.

விக்கி – தமிழரசு தலைமை முரண்பாட்டுக்கு காரணம்

உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களுக்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் வடமாகாண முதலமைசசர் சி.வி.விக்னேஸ்வரன் எழுப்பிய கேள்வி அரசியலரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

தமிழரசுக் கட்சித் தலைமைக்கும் இந்தக் கேள்வி பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களையும் சீற்றமடைய வைத்திருக்கின்றது. ஆனால், அதற்கான உரிய பதிலைச் சொல்லக்கூடிய நிலையில் தமிழரசுக் கட்சித் தலைமைகள் இல்லை என்பதுதான் பரிதாபம்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கட்சி சார்ந்த ஒருவராக அரசியலில் பிரவேசித்தவர் அல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 4 பங்காளிக் கட்சிகளினதும் தலைவர்களும் முன்வைத்த கோரிக்கையையடுத்தே முதலமைச்சர் வேட்பாளராக அவர் களம் இறங்க இணங்கினார். கொழும்பைத் தளமாகக் கொண்டவராக அவர் இருந்தாலும், பின்னர் யாழ்ப்பாணம் சென்று அரசியல் செய்யத் தொடங்கிய பின்னர் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அதற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒருவராக அவர் பார்க்கப்படுகின்றார்.
தமிழரசுக் கட்சித் தலைமையுடன் அவருக்கு பின்னர் ஏற்பட்ட முரண்பாடு இரகசியமானதல்ல. இது ஒரு தனிப்பட்ட முரண்பாடும் அல்ல.

வடமாகாண சபை நிறைவேற்றிய சில தீர்மானங்கள்தான் இந்த முரண்பாடுகளுக்குக் காரணம். அந்தத் தீர்மானங்களை தமிழரசுத் தலைமை விரும்பவில்லை. அந்தத் தீர்மானங்கள், அரசாங்கத்துக்கு சங்கடத்தைக் கொடுப்பதாக இருந்தமையால், தமிழரசுத் தலைமை அதனை விரும்பியிருக்கவில்லை. குறிப்பாக இனப்படுகொலை குறித்த தீர்மானம் அரசாங்கத்துக்கு பெரும் சங்கடத்தைக்கொடுத்தது.

அந்தத் தீர்மானத்தை அடியொற்றிய தீர்மானம் ஒன்று தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது என்பதும் கவனிக்கத்தக்கது. தமிழகத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியளவுக்கு அந்தத் தீர்மானம் அமைந்திருந்தது.

விக்கியின் கேள்வியால் அரசியலில் சலசலப்பு…

தமிழரசுத் தலைமையுடனான முரண்பாடுகள் உச்சமடைந்திருக்கும் நிலையில், இப்போது முதலமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிக்கை பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. முதலமைச்சர் வேட்பாளராக தான் களம் இறங்கியபோது இருந்த நிலையையும், குறிப்பிட்டு தற்?போதைய நிலைமைகளையும் அவர் இந்த அறிக்கையில் விமர்சனத்துக்குள்ளாக்கியிருக்கின்றார்.
“2013ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனம் எனக்குத் தரப்பட்டது. அதில் உள்ள கொள்கைகள் எனக்குச் சரியெனப்பட்டன.

எனவே அதனை அடிப்படையாகக் கொண்டு என் அரசியல் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டேன். ஆனால் வெகுவிரைவில் ஒன்றை உணர்ந்து கொண்டேன். விஞ்ஞாபனக் கொள்கைகளுக்கும் விரவியிருந்த யதார்த்த நிலைக்கும் இடையில் பாரிய விரிசல் இருந்ததை நான் உணர்ந்தேன். கொள்கைகள் மக்களுக்கு ஆனால் அரசியல் கொடுக்கல் வாங்கல்கள் கட்சித் தலைமைப்பீடங்களுக்கே என்பது தான் யதார்த்தமாக இருந்தது” என பாரிய குற்றச்சாட்டை தமிழரசுத் தலைமையை நோக்கி அவர் முன்வைக்கின்றார்.

இதனைவிட, மற்றொரு விடயத்தையும் அவர் குறிப்பிடுகின்றார். : “இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் அல்லது அவற்றோடு சம்பந்தப்பட்ட முடிவுகள் எந்தவித கூட்டுக் கருத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை என்பதையும் கண்டு கொண்டேன். நடைமுறை நலன்கள் எவ்வாறு அமைந்தனவோ அவற்றை முன்வைத்தே தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அங்கு சுயநலமே கட்சித் தலைமைப்பீடத்தால் கருத்துக்கெடுக்கப்பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டேன்.

உதாரணத்திற்கு தேர்தல் விஞ்ஞாபன சிந்தனைக்கேற்ப இனப்படுகொலை சம்பந்தமான பிரேரணை கொண்டுவரப்பட்டு எமது வடமாகாண சபையால் ஏற்கப்பட்ட போது கட்சித் தலைமைத்துவம் அதிர்ச்சி அடைந்ததை நான் கண்டேன். அது சம்பந்தமான தலைமைத்துவக் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைந்ததையுங் கண்டு கொண்டேன்” என அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு குறிப்பிடும் முதலமைச்சர், முக்கியமான விடயம் ஒன்றையும் வலியுறுத்தியிருக்கின்றார்.

தேர்தலில் வாக்கு கேட்கும் போது அதற்காக சில வாக்குறுதிகள் கொடுக்கிறோம். ஒரு விஞ்ஞாபனத்தை வெளியிடுகின்றோம். ஆனால், பின்னர் அரசுடன் பேச்சுக்களை நடத்தும் போது அதற்குக் குறைவாகத்தான் பேரம் பேசுகின்றோம். அல்லது அரசிடம் கேட்கிறோம் என்பதைக் குறிப்பிடும் முதலமைச்சர், இதில் என்ன நியாயம் இருக்கின்றது? எனக் கேள்வி எழுப்புகின்றார். இது மக்களுக்குச் செய்யும் ஒரு துரோகம் என்பதுதான் அவரது நிலைப்பாடு. இந்தநிலையில், இப்போது மீண்டும் வாக்குக் கேட்டு மக்கள் முன் செல்லப்போகும் தமிழரசுக் கட்சித் தலைமை எந்த விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் வாக்கு கேட்கப்போகின்றது என்பதுதான் அவர் எழுப்பும் கேள்வி!

இடைக்கால வரைபும் தமிழரசின் நிலையும்

தேர்தல் நடைபெறவிருக்கும் இன்றைய நிலையில், அரசியலமைப்புக்கான இடைக்கால வரைவு வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்த விவகாதங்களும் இடம்பெற்றுவருகின்றன. கடந்த தேர்தல்களின் போது தமிழரசுக் கட்சித் தலைமையால் வெளியிடப்பட்ட விஞ்ஞாபனங்களிலிருந்து வெகு தொலைவில் இந்த வரைவு உள்ளது.

குறிப்பாக, பௌத்த மதத்துக்கு முன்னுரிமை, வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை, சமஷ்டி இல்லை, மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரம் போன்றவற்றில் தெளிவற்ற நிலை என சிங்கள பௌத்த மயமாக்கலை இலக்காகக்கொண்ட ஒரு அரசியலமைப்பாகவே இது உள்ளது.

இவ்வாறான ஒரு அரசியலமைப்புக்கு தமிழ் மக்கள் ஆணைகொடுக்கவில்லை. ஆனால், இந்த அரசியலமைப்பை இனநெருக்கடிக்கான தீர்வாக ஏற்றுக்கொள்ள தமிழரசுத் தலைமை இன்று தயாராக இருக்கின்றது. இந்த நிலையில், “எந்த விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் தமிழரசுக் கட்சி இப்போது மக்கள் முன்வரப்போகின்றது?” என்ற விக்னேஸ்வரனின் கேள்வி தமிரசுத் தலைமைக்கு நிச்சயமாக நெத்தியடியாகவிருக்கும். முதலமைச்சர் தனது கேள்வியை தகுந்த ஆதாரங்களுடன்தான், தர்க்க ரீதியாக எழுப்பியிருக்கின்றார்.

இதற்குப் பதிலளிக்க முற்பட்ட தமிழரசுக் கட்சித் தெலைவர் மாவை சேனாதிராஜா, “முதலமைச்சரின் விசமத்தனமான பிரச்சாரங்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என மட்டுமே சொல்லியிருக்கின்றார். இரண்டு தடவைகள் அதனை அவர் சொல்லியிருக்கின்ற போதிலும், முதலமைச்சரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க அவரால் முடியவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இந்த நிலையில்தான், தமிழரசுக் கட்சியின் முக்கியமான சட்டத்தரணி ஒருவிடம் மாவையின் சார்பில் பதில் அறிக்கை தயாரிக்கும் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழரசுக் கட்சியின் செயலாளர் என்ற முறையில் முதலமைச்சருக்குப் பதிலளிக்க முற்பட்டு கி. துரைராசசிங்கம் மூக்குடைபட்டுப்போயிருக்கின்றார். கட்சித் தலைமைப் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்ததால்தான் விக்கி தமிழரசுக்கு எதிராகச் செயற்படுகின்றார் என்பதே அவர் முன்வைத்த வாதம். வடக்கு – கிழக்கில் தமிழரசுக்கு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலை இப்போதுள்ளது. இந்த நிலையில், மாற்று அணிக்கான தலைமை அவரிடமே வந்தது.

அதனை அவர் ஏற்கவில்லை. அதனை ஏற்றிருந்தால் பலமான ஒரு தலைவராக அவர் உருவாகியிருக்கலாம். ஆனால், அதனை அவர் ஏற்கமறுத்தார். ஆக, தமிழரசுக் கட்சியினர் குழம்பாமல், மக்களுக்கு தவறான நம்பிக்கையைக் கொடுக்காமல், செயற்பட வேண்டிய காலம் உருவாகியிருக்கின்றது.

முதலமைச்சரின் அறிக்கை தமிழரசின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கின்றது. இதற்கு தர்க்கரீதியாக பதிலளிக்க முடியாவிட்டால், தமிழரசுத் தலைமை மௌனமாக இருப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

– எஸ்.கிருஷ்ணகுமார் –

LEAVE A REPLY