விகாரை அமைப்பினை தடுத்தனர்:தமிழ் இளைஞர்கள் கைது!

முல்லைத்தீவு குமுளமுனை தண்ணிமுறிப்புபிரதேசங்களுக்கிடையில் நிர்மாணிக்கப்படவுள்ள சுருந்தாவசோக விகாரை பணிகளை தடுத்து நிறுத்தியதாக இளைஞர்கள் இருவர் கைதாகியுள்ளனர்.

விகாரை அமைப்பு பணிகளை தடுத்ததன் மூலம் இனநல்லிணக்கத்தை பாதிக்க செய்ததாக ஜக்கிய தேசியக்கட்சியின் உள்ளுர் பிரமுகரான கலைச்செல்வன் என்பவர் இலங்கை காவல்துறையின் முல்லைதீவு காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைதான இளைஞர்கள் இருவரும் நேற்றிரவு நீதிவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே இலங்கை தொல்பொருள் திணைக்களத்தில் பதியப்பட்ட விகாரை ஒன்றினை புனரமைப்பதற்காக இரண்டு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் இரண்டு புத்த துறவி உள்ளிட்டவர்கள் ஆய்வு பணிசெய்வதற்காகவே குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு சென்றுள்ளதாக பௌத்த பிக்குகள் சார்பாக ஒட்டுசுட்டான் காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஒட்டுசுட்டான் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட குறித்த நபர்கள் காவல்துறையினரிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்கள்.
இலங்கை பூகோளவியல் பணிப்பாளரின் கடிதத்தின்படி குருந்தூர் மலையில் சுருந்தாவசோக விகாரை புனரமைக்க வந்துள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தினை ஒட்டுசுட்டான் காவல்; நிலைய பொறுப்பதிகாரிக்கு சமர்ப்பித்ததையடுத்தே அவர்களை விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.