வாயைக் கொடுத்து மாட்டிய பாதுகாப்புச் செயலர் – பதவியைப் பறிக்க சிறிசேனவுக்கு அழுத்தம்

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவை பதவி நீக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தில் உள்ள அனைவரும் போர் வீரர்கள் அல்ல என்றும், இராணுவத்தில் உள்ள ஒருவர் குற்றம் செய்தால் அவர் குற்றவாளி தான் என்றும் நாலந்தா கல்லுரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் கூறியிருந்தார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ.

அத்துடன், விருதுகளைப் பெற்றவர்கள் தான் போர் வீரர்கள் என்றும் குறிப்பிட்ட அவர், அடுத்த இரண்டு வாரங்களில் 11 சிறிலங்கா படையினருக்கு எதிராக குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் சுமத்தப்படும் என்றும் அதற்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்களால் வாய் திறக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.

அவரது இந்தக் கருத்துக்கு முன்னாள் படை அதிகாரிகள், கடும்போக்கு சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இதுதொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் தகவல் வெளியிடுகையில், ‘ஆயுதப்படையினரை விமர்சிக்கும் வகையில் பாதுகாப்புச் செயலர் உரையாற்றியதாக தகவல் கிடைத்ததும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.

இது சிறிலங்கா அதிபரின் கருத்தை பிரதிபலிப்பதாக தோன்றுகிறது என நான் அவரிடம் கூறினேன்.

அதற்கு அவர், பாதுகாப்புச் செயலர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு. அவரது சொந்த இடத்தில் இருக்கிறார் என்றும், இந்த செய்தி சரியானதாக இருக்காது என்றும் கூறினார்.

அடுத்தநாள், சிறிலங்கா அதிபர் என்னை தொலைபேசியில் அழைத்தார். பாதுகாப்புச் செயலர் அப்படிக் கூறியிருக்கிறார் என்பது உண்மை தான் என்று தெரிவித்தார். தானும் தொலைபேசி செய்திகளில் அதனைப் பார்த்ததாகவும் கூறினார்.

பாதுகாப்புச் செயலரை அழைத்து, இது குறித்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது என்று கூறுமாறு சிறிலங்கா அதிபரிடம் நான் கூறினேன்.

போர் வீரர்கள் மீது குற்றச்சாட்டு இருந்தால் அவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யுமாறு புலம்பெயர்ந்தோருக்கு அழைப்பு விட பாதுகாப்புச் செயலருக்கு அதிகாரம் இல்லை.

அத்தகையவர்கள் எமக்குத் தேவையில்லை. அவரது கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம். பாதுகாப்புச் செயலர் பதவிக்கு அவர் பொருத்தமானவர் அல்ல” என்றும் தெரிவித்தார்.

அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்டவர்களும், முன்னாள் படை அதிகாரிகளும் ஹேமசிறி பெர்னான்டோவின் கருத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.