வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வேகமில்லை – ஐரோப்பிய ஒன்றியம்!

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைக்காக சிறிலங்கா அரசாங்கம் அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சில விடயங்களில் மெதுவான முன்னேற்றங்களே இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

அதேவேளை, தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஆற்றல் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இருப்பதாகவும், ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடன் நடந்த சந்திப்பின் போது, ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ்ரோஸ் ஸ்ரைலியனிடெஸ் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

பிரசெல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த இந்தச் சந்திப்பில் சிறிலங்காவின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவும், வெளிவிவகார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதியான பெடெரிக்கா மொக்ஹேரினியும் கலந்து கொண்டனர்.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஐரோப்பிய ஆணையாளர் இந்தச் சந்திப்பின் போது வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, அனைத்துலக தர நியமங்களுக்கு ஏற்ப சட்டரீதியாக மனித உரிமைகள் தரத்தை உயர்த்துவது மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மனித உரிமைகளை மதிப்பதிலும், அனைத்துலக கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதிலும் சிறிலங்கா அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக, இந்தச் சந்திப்பின் போது, திலக் மாரப்பன உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY