வாக்களிக்காத தமிழ் மக்களை பழிவாங்கும் ஜனாதிபதி கோட்டாபய! சம்பந்தன் ஆவேசம்

தமிழர்களையும், தமிழ் மொழியையும் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை நாம் ஆதரிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே இன்று இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் தாம் கலந்துகொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று (4) ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம் நாடு தழுவிய ரீதியில் கோலாகலாமாக கொண்டாடப்பட்டது.

சுதந்திர தின நிகழ்விற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிற்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் இது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் 72ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைக் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார் இருப்பினும் நாம் கலந்துகொள்ளவில்லை.

தமிழர்களையும், தமிழ் மொழியையும் புறக்கணிக்கும் அவர்களின் செயற்பாடுகளை நாம் ஆதரிக்க முடியாது. இதன் காரணமாக இன்றைய தேசிய சுதந்திர தின நிகழ்வில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பங்கேற்குமாறு ஜனாதிபதி அலுவலகம் அழைப்பு விடுத்திருந்தது. இது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம்.

2015 ஆம் ஆண்டிலிருந்து சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. இம்முறை சிங்கள மொழியில் மாத்திரம் இசைக்கப்படும் என்று கோட்டாபய அரசு கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. அதனால் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களைப் புறக்கணிக்கும் வகையிலேயே கோட்டாபய தலைமையிலான அரசு செயற்படுகின்றது. ஜனாதிபதி தேர்தலில் தனக்கு வாக்களிக்காத தமிழ் மக்களைப் பழிவாங்கும் வகையிலேயே அவர் செயற்படுகின்றார். இந்தக் காரணங்களால் இன்றைய சுதந்திர தின நிகழ்வைப் புறக்கணித்துள்ளோம்” என கூறினார்.