வவுனியாவை சிங்களமயமாக்க அனுமதியளித்தது யார்?- சத்தியலிங்கம் கேள்வி

வவுனியாவை சிங்களமயமாக்க அனுமதியளித்தது யாரென வட. மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.

கச்சல் சமனங்குளம் பகுதியில் உள்ள தொல்பொருள் சின்னம் காணப்படும் இடத்தில், புத்த சின்னங்கள் வைக்கப்பட்டு சிங்கள குடியேற்றம் இடம்பெற்றுவரும் நிலையில், இந்த விடயம் தொடர்பாக வவுனியா அரசாங்க அதிபருக்கு, வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ‘வவுனியா வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவு எல்லைக்குட்பட்ட கச்சல் சமளன்குளத்தை புனரமைப்பு செய்வதற்கான அனுமதி கமநலசேவைத் திணைக்களம் வழங்கியுள்ளதா?

வயல்களை அமைக்கும் நோக்கத்திற்காக காடுகள் அழிப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா?

அதேவேளை பூம்புகார் மற்றும் புதியவேலர்சின்னக்குளம் போன்ற குளங்கள் அரச நிதியில் புனரமைப்புச் செய்யப்பட்டும் தற்போதுவரை அக்குளங்களிற்குக் கீழ்வரும் காணிகளில் பயிற்செய்கை மேற்கொள்ள வனவளத்தினைக்களம் அனுமதி வழங்கவில்லை.

மேற்கூறப்பட்ட காணிப் பகிர்ந்தளிப்பானது வவுனியா வடக்கு பிரதேச செயலாளரால், எவ்வடிப்படையில் அல்லது பயனாளர் தெரிவு எவ்வடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது?

தொல்பொருள் திணைக்களமானது தொல்பொருள் சின்னங்களை அவை உள்ளபடி பாதுகாப்பதற்கு மேலதிகமாக எவ்வடிப்படையில் ஒரு மதம் சார்ந்த வழிபாட்டு உருவச்சிலைகளை அங்கு வைத்துள்ளது?

அச்சிலைகள் அவர்களால் வைக்கப்படவில்லையாயின் சிலை வைப்பதற்கும் அப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கும் அனுமதியளித்தது யார்?

மேற்கூறிய சட்டத்திற்குப் பிறழ்வான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவற்கு தாங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புவதோடு, இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு எமது மாவட்டத்தில் மூவினமக்களும் சம உரஜமையோடு வாழுவதற்கும் சமூகங்களிற்கிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.