வவுனியாவில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள அதிரடிப்படையினரின் சோதனை நடவடிக்கை

வவுனியா புளியங்குளம் பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி விஷேட அதிரடிப்படையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

குறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு யாழ்ப்பாணத்திலிருந்து 7.15 மணியளவில் கண்டி நோக்கி சென்ற இ.போ.ச பேருந்து, இரவு 9.25 மணியளவில் புளியங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள விஷேட அதிரடிப்படையினரின் முகாமுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள விஷேட சோதனை நடவடிக்கை நிலையத்தில் வழிமறிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அதில் பயணித்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு அவர்களுடைய பயணப்பொதிகள் மற்றும் அடையாள அட்டைகள் ஆகியவற்றை விஷேட அதிரடிப்படையினர் பரிசோதித்ததுடன் 15 நிமிடங்களின் பின்னர் பேருந்தில் செல்ல அனுமதித்துள்ளனர்.

மேலும் பேருந்தில் சென்ற பயணிகள் இவ்விடயம் குறித்து வினவியபோது, தமது வழமையான நடவடிக்கையென விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

புளியங்குளம் படையினரின் சோதனை நடவடிக்கை முடிவடைந்து ஓமந்தை நொச்சிமோட்டை பாலத்தில் கடமையிலிருந்த பொலிஸார் தமது சோதனை நடவடிக்கைக்காக பேருந்தை வழிமறித்துள்ளனர்.

இதன்போது பேருந்தில் பயணித்த பயணிகள், ஏற்கவே விஷேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர் எனக் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து பொலிஸார் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.