வலிந்து காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இராஜதந்திர சமூகம் ஆதரவு

சர்வதேச காணாமல் போனவர்களின் தினத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு இலங்கையை தளமாகக் கொண்ட இராஜதந்திர சமூகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போரின்போது ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் அதற்கான நீதியையும் கோரி அவர்களது குடும்பங்கள் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் இலங்கையில் உள்ள ஐ.நா. வதிவிட பிரதிநிதி, ஹனா சிங்கர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வலிந்து காணாமல் போனவர்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமைகளை தொடர வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களிலிருந்தும் வலிந்து காணாமல் போனவர்களின் குடும்பங்களுடன் நான் நிற்கிறேன். இந்த குடும்பங்கள் கடுமையான மன வேதனையைத் தாங்குகின்றன, எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு அல்லது இழப்பீட்டினை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்” என கூறியுள்ளார்.

இதேவேளை காணாமல் போனோர் தொடர்பான விடயத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவது தற்போது முக்கியமல்ல என்றும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அவர்களது குடும்பங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் இங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் பதிவிட்டுள்ளார்.

அத்தோடு குடும்பங்களுக்கும் இன்றைய தலைமுறையினருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் பணி மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் காணாமல் போனவர்கள் மீது கவனத்தை ஈர்த்து டுவிட் செய்துள்ளது.

வலிந்து காணாமல் போனவர்களின் சர்வதேச தினத்தன்று, காணாமல் போன அனைவரையும், அவர்களது குடும்பத்தினரையும், தொடர்ந்து பதில்களைத் தேடும் அன்புக்குரியவர்களையும், அவர்களுக்கு நீதி மற்றும் தீர்வினை பெற்றுக்கொடுக்க அயராது உழைக்கும் அனைவரையும் நாங்கள் நினைவில் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், காணாமல் போனவர்கள் தொடர்பாக பதில்களை தேடி அலையும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவை வழங்குவதாக இலங்கையில் உள்ள கனேடிய உயர் ஸ்தானிகராலயம் டுவீட் செய்துள்ளது.

இலங்கையில் பல தசாப்தங்களாக ஏற்பட்ட மோதல்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை தங்களது அன்புக்குரியவர்கள் இல்லாமலும் அதற்கான பதில் இல்லாமலும் வாடுகின்றனர்.

இந்த காணாமல் போனவர்களின் சர்வதேச நாளில், நாங்கள் காணாமல் போனவர்களின் குடும்பங்களுடன் இணைந்து பதில்களைத் தேடுகின்றோம்” என பதிவிட்டுள்ளது.