வறுமையோடு மக்கள் போராடும் நிலையில் மத்திய கடுகதி வீதி அவசியமா? – ஆனந்தசங்கரி கேள்வி

வறுமையோடு மக்கள் போராடி வரும் இந்நிலையில் மத்திய கடுகதி வீதி அவசியமா என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கும் அவர், “அப்பாவி மலையக தோட்டப்புற மக்களுக்கு சம்பளத்தில் 50 ரூபாயினை அதிகரித்து விட்டு, அவர்களின் பிரச்சினைகள் தீர்ந்து விட்டன என்று கருதுகின்றனர். ஆனால் இந்த பணம் ஒருவரின் காலை உணவிற்கே போதாது.

முன்னுரிமைக் கொடுத்து அரசு வறுமையை முற்றுமுழுதாக ஒழிப்பதையே கடமையாகக் கொள்ளவேண்டும். வறுமையோடு போராடுகின்ற மக்கள் எவரிற்கு மத்திய கடுகதி வீதி தேவைப்படுகின்றது.

ஏற்கனவே நாடு பெருமளவில் கடனாளியாக உள்ளது. புதிய கடனாகப் பெரும் ஒரு பில்லியன் டொலர் என்ற செய்தி அதிர்ச்சியைக் கொடுக்கின்றது.

இந்த ஆலோசனையின் சூத்திரதாரி யார்? ஜனாதிபதியிடமோ, அமைச்சரவையிலோ, நாடாளுமன்றத்திலோ இதற்கான அனுமதி பெறப்பட்டதா? கடனைக் கட்டுவதற்கு என்ன ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது? இதுவரை அதிகாரத்தில் உள்ள எவரும் ஒரு வார்த்தை கூட இதுபற்றி பேசவில்லை. ஏன் எல்லோரும் மௌனம் சாதிக்கின்றார்கள்?

அரசாங்கம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. பெரும்பான்மை பலத்துடன் இந்த நாடு இன்றைய ஆட்சியாளர்களால் ஆளப்படுகின்றதா?

நிலையற்ற ஆட்சியை மேற்கொண்டிருக்கும் தற்போதைய அரசு எந்த நேரமும் பதவி இழக்கக்கூடிய சூழ்நிலையில், இத்தகைய பெரும் தொகையான ஒரு பில்லியன் டொலர் பணத்திற்கு நாட்டை பொறுப்புக்கு உள்ளாக்குவது நியாயமானதா? அரசுக்கு தற்போதுள்ள ஒரேயொரு சந்தர்ப்பம் இத்தகைய பிரச்சினையை உரிய இடத்தில் உரிய முறையில் தெளிவுபடுத்தி நடவடிக்கை மேற்கொள்வதே” என அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.