வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பில் பங்கெடுக்காமைக்கான காரணம் என்ன? தெளிவு படுத்தியது ஈ.பி.ஆர்.எல்.எப்

indexஎமது மக்களின் அபிலாசைகளுக்கும் இறைமைக்கும் மதிப்பளித்தும் ஜனநாயகக் கடமையை உணர்ந்துமே வரவு-செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின்மீதான வாக்கெடுப்பில் நாம் கலந்துகொள்வதில்லை என்ற முடிவிற்கு வந்தோம்.


இரண்டாம் வாசிப்பின்மீதான விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ந.சிவசக்தி ஆனந்தன் மற்றும் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் ஆகியோர் கலந்துகொள்ளாமைக்கான காரணம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் நல்லாட்சி அரசாங்கம் என்று அழைக்கப்படுகின்ற இந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் இந்நாட்டின் பெரும்பான்மை தேசிய இனமக்களும் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்கும்; குடும்ப சர்வாதிகார ஆட்சியிலிருந்து இந்நாட்டைக் காப்பாற்றுவதற்கும் எதுவித நிபந்தனைகளுமின்றி அரும்பங்காற்றியுள்ளனர் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இருந்தும் 2016ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மக்களுக்கு எதிர்பார்த்த நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்பதையும் அரசியல் கைதிகள் விடுதலை, தமிழர்கள் வாழ்கின்ற மாவட்டங்களில் தமிழ் அரசாங்க அதிபர்களை நியமித்தல் போன்ற சிறிய அரசியல் கோரிக்கைகளைக்கூட இந்த நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பதையும்;, அவற்றை நிறைவேற்றுவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும்கூட காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன என்பதையும் இவ்விடத்தில் பதிவு செய்து கொள்கிறோம்
முன்னர் ஆட்சியாளர்களாகவும் பிரதான எதிர்க்கட்சியாகவும் பெரும்பான்மை இனக்கட்சிகள் இருந்தமையால்தான் எமது கோரிக்கைகள் செவிமடுக்கப்படாமல் இருந்தன எனக் கருதப் பட்டது. இப்பொழுது இரண்டு கட்சியினரும் ஓரணியில் இருப்பதால் எமது கோரிக்கைகள் உரியமுறையில் பரிசீலிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் நாமும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு நிபந்தனையின்றி ஆதரவளித்தோம். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் 16ஆசனங்களைப் பெற்று நிபந்தனைகளின்றி பாராளுமன்றத்திற்கு வெளியில் இருந்து இந்த அரசாங்கத்திற்கும் ஆதரவளிக்கத் தீர்மானித்தோம்.
இதற்குப் பிரதி உபகாரமாக இப்பொழுது எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர் பதவி மற்றும் அரசியல் யாப்பு சீர்திருத்தசபை உறுப்பினர் என்ற பதவிகள் கூட்டமைப்பிற்குக் கிடைத்துள்ளன. இருப்பினும் இந்தப்பதவிகளால் எதுவித பயனையும் தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்கின்ற கசப்பான யதார்த்தத்தை இப்பதவியில் இருப்பவர்களே நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இராணுவத்தின் ஆக்கிரமிப்பின்கீழ் இருந்த சில காணிகள் விடுவிக்கப்பட்டமையும்கூட கடந்த அரசாங்கத்தால் விடுவிக்கப்படுவதாக அறிவித்த காணிகளையே இந்த அரசாங்கம் விடுவித்துள்ளதே தவிர, புதிதாக எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதே போன்றே, மீள்குடியேற்றம் தொடர்பிலும் தட்டிக்கழிக்கும் போக்கே தொடர்கிறது.
இந்நிலையில் 2016ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுதிட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் முதல் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்வரை அனைவருமே இந்த வரவு-செலவுத்திட்டத்தைக் கடுமையாக சாடியே உரையாற்றியுள்ளனர்.
நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கப்போகிறோம் என்பது வெளியாகிய பின்னரே, இப்பொழுது அவரசர அவசரசமாக வடக்கு மாகாணத்திற்கென பத்து திட்டங்களுக்காக நிதியொதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரத்திற்குக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாராளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்டம் கையளிக்கப்படுவதற்கு முன்னதாக வடக்கு மாகாணசபையுடன் கலந்தாலோசிக்காமல் இருந்துவிட்டு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளமையையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இது வெறும் அறிவிப்புதான் இன்னும் அங்கீகாரம் பெறவில்லை இதுவும் இந்த அரசாங்கத்தின் ஏனைய வாக்குறுதிகளைப் போன்றே காற்றில் கரையவிடப்படாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை
இத்தகைய சூழலில் வரவு-செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் வரவு-செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிக்க முடிவெடுத்திருப்பது எம்மை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. எந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து எமக்கு குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அரசாங்கத்திற்கு எமது எதிர்ப்பை வெளியிடுமுகமாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு எமது அதிருப்தியைத் தெரிவிப்பதற்கும் எமது வேண்டுகோளை ஏற்று தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களின் உணர்வுகளை மதிக்கின்ற வகையிலும் அதேவேளை ஐக்கியத்திற்குக் குந்தகம் ஏற்படாத விதத்திலும் நாம் இந்த வாக்கெடுப்பிலிருந்து ஒதுங்கியிருக்கத் தீர்மானித்தோம்.
இனிமேலாவது அரசாங்கம் எமது மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்க முன்வரவேண்டும் என்றும், அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தமது பூரண இதயசுத்தியுடனான அழுத்தங்களை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

LEAVE A REPLY