வரலாற்று தவறுகளை தமிழ் மக்கள் மீண்டும் செய்யக்கூடாது- கருணா

வரலாற்று தவறுகளை மீண்டும் தமிழ் மக்கள் செய்யக்கூடாதென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி தமிழர்களுக்கு கிடைத்த பொற்காலமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவையை அமைத்துள்ளமையால் முஸ்லிம் அரசியல்வாதிகள் அடங்கிபோயுள்ளனர்.

கடந்த பொது தேர்தலில் தமிழ் மக்களை சிங்கள மக்கள் காப்பாற்றி விட்டனர். மேலும் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியின் பின்னர் தமிழ் மக்கள் காப்பாற்றபட்டனர் என்றே சொல்ல வேண்டும். இது தமிழர்களுக்கு கிடைத்த பொற்காலம் ஆகும்.

மஹிந்த ராஜபக்ஷ ஒரு தமிழின பற்றாளர். எனவே எதிர்வருகின்ற வாய்ப்புகளை தவறவிட்டு வரலாற்று தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது இது நம்மை பின்னோக்கி நகர்த்துமென கூற விரும்புகின்றேன்.

மேலும் திருமலை, அம்பாறை மக்களுக்கு அரசியல் தெளிவு வேண்டும். பிள்ளையான் முதலமைச்சராக இருந்தபோது தமிழர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது.

எனவே இவைகளை கருத்திற்கொண்டு தமிழ் மக்கள் அனைவரும் சிந்தித்து செயற்பட வேண்டும்.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, அனைத்து இடங்களிலும் கால்பதித்து வருகின்ற பொதுதேர்தலில் களமிறங்கி முயற்சி செய்தால் இரண்டு ஆசனங்களை பெற்று கொள்ளலாம்.

இதன்மூலம் அம்பாறைக்கு ஒரு தமிழ் அமைச்சர் கிடைக்கும். அப்போது தமிழர்களின் அபிவிருத்தியும் எமது கையில் அதிகாரமும் கிடைக்கும்.

இந்த நோக்கத்திற்க்காகவே சுதந்திர கட்சியின் பிரதித்தலைவர் பதவியை துறந்து, மஹிந்தவிடம் கூறிவிட்டு வெளியேறினேன். அப்போதுதான் தமிழ் மக்களுக்கான பேரம் பேசும் சக்தியாக மாறமுடியும் என்ற நோக்கம் மாத்திரமே என்னிடம் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.