வட.மாகாண ஆளுநர் மீது சுரேஸ் பிரேமசந்திரன் கடும் கண்டனம்

ஜனாதிபதியை திருப்திபடுத்தவே வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் வவுனியாவில் பௌத்த மாநாடு நடத்தப்பட்டதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்தோடு வடக்கில் நல்லுணர்வு பேணப்பட வேண்டுமென்றால் அங்கு காணிகள் அபகரிக்கப்பட்டு, பௌத்த கோயில்கள் அமைக்கப்படுவது தடுக்கப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வடக்கு கிழக்கு பௌத்தமயமாக்கப்பட்டு வருகின்றது. அத்தோடு தமிழர்களின் கோயில்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. பெளத்த சின்னங்கள் காணப்படுவதாக கூறி பல இந்து கோயில்கள் அழிக்கப்பட்டு அங்கு பௌத்த ஆலயங்கள் அமைக்கப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் வடக்கில் நல்லுணர்வு பேணப்பட வேண்டுமென வலியுறுத்தி பௌத்த மாநாடு நடத்தப்பட்டது.

ஆனால், வடக்கில் நல்லுணர்வு பேணப்பட வேண்டுமென்றால் வடக்கு கிழக்கில் காணிகள் அபகரிக்கப்பட்டு பௌத்த கோயில்கள் அமைக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறு நேற்றைய மாநாட்டில் ஒரு முடிவு எட்டப்பட்டிருந்தால் அதில் அர்த்தம் ஏற்பட்டிருக்கும். ஆனால் அவ்வாறு எதுவும் இல்லாமல் இந்த மாநாட்டை நடத்தியது ஜனாதிபதியை திருப்திபடுத்தவே என எண்ணத் தோன்றுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.