வட கொரியா மீது தடைகளை விதிக்க சீனாவை தூண்டுகிறது அமெரிக்கா

ஐநாவிற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி இத்தகவலை கூறியுள்ளார். வட கொரியா தனது ஏவுகணை சோதனைகளையும், அணு ஆயுத சோதனைகளையும் முற்றிலும் நிறுத்தினால்தான் அதனுடன் பேசு முடியும் என்று அமெரிக்க பிரதிநிதி கூறினார்.

ஞாயிறு அன்று வட கொரியா புதிய ஏவுகணை சோதனையை செய்தது. ஏவுகணை ரஷ்யாவிற்கு அருகில் போய் விழுந்தது. சோதனையின் தன்மையை வைத்துப் பார்க்கும்போது சுமார் 4,500 கி.மீ சென்று தாக்கக்கூடிய ஆற்றலுள்ள ஏவுகணையை அந்நாடு சோதித்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் அதிக கனமுடைய அணு ஆயுதத்தையும் ஏற்றிச் செல்ல முடியும். இப்பின்னணியில்தான் புதிய தீர்மானங்களை ஐநாவில் கொண்டு வர அமெரிக்கா சீனாவைத் தூண்டுகிறது. என்றாலும் சீனா அமெரிக்காவிற்கு உதவக்கூடிய வகையில் நடந்து கொள்ளவில்லை என்றே ஹாலி சொல்கிறார்.

ஐநா பாதுகாப்பு அவை 2006 ஆம் ஆண்டில் வட கொரியா மீது தடைகளை விதித்தது. அந்நாடு இதுவரையில் ஐந்து அணு ஆயுத சோதனைகளையும், இரண்டு பெரிய ஏவுகணை சோதனைகளையும் நடத்தியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னால் நடத்திய சோதனை தோல்வியில் முடிந்தாலும் ஞாயிறு சோதனை வட கொரியாவின் ஆற்றல் அதிகமாகியிருப்பதையே காட்டுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

LEAVE A REPLY