வடக்கு மாகாண ஆளுநருக்கு செல்வம் MP கடிதம்!

மன்னார் மாவட்டத்திற்குரிய பல பாடசாலைகள் தற்போதும் புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வருவது குறித்து கவனம் செலுத்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பல பாடசாலைகள் இன்றும் புத்தளம் மாவட்டத்திலே இயங்கி வருகின்றன. அத்தோடு அங்கு கடமை புரியும் ஆசிரியர்களுக்குரிய சம்பளமும் அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

1990ஆம் ஆண்டு வட மாகாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையினால் அம்மாணவர்கள் அங்கு கல்வி கற்பதற்காக ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டிருந்தன. நாட்டில் சுமூகமான சூழ்நிலைகள் ஏற்பட்ட பின்னரும் அப்பாடசாலைகள் புத்தளம் மாவட்டத்திலேயே இயங்கிக்கொண்டிருக்கின்றன.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து கல்வியை கற்று உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

இந்நிலையில் புத்தளத்தில் கற்கும் மாணவர்கள் பல வசதிகளுடன் கற்றலை மேற்கொண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற நிலையில், அவர்களும் மன்னார் மாவட்டத்தின் வெட்டுப்புள்ளியிலேயே கணக்கெடுக்கப்படுகின்றனர்.

இதன் காரணமாக மன்னாரிலிருந்து மன்னாரிலேயே கல்வி கற்கின்ற மாணவர்களுக்கான வாய்ப்புக்கள் தட்டிப் பறிக்கப்படுகின்றமையினால் கடுமையான பாதிப்புக்களை மாணவர்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

மேலும் புத்தளத்தில் இயங்குகின்ற பாடசாலைகள் புத்தளம் மாவட்டதினுள்ளேயே பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில் குறித்த பாடசாலைகள் மன்னார் மாவட்டத்திலுள்ள தமது சொந்த இடங்களில் இயங்கி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஒரு தீர்மானம் வட மாகாணசபையால் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் வட மாகாண ஆளுநரின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டுசெல்லப்பட்டு அவர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். எனினும் அவை இதுவரை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.

இதன் மூலம் மன்னார் மாவட்டத்தில் உயர்கல்வி கற்கின்ற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதையும் மன்னார் மாவட்ட மாணவர்களின் வளங்கள் புத்தளம் மாவட்டத்தினால் பயன்படுத்தப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே இதை நீங்கள் உடனடியாக கவனத்திற்கொண்டு குறித்த பாடசாலைகளை புத்தளம் மாவட்டத்தினுள் பதிவு செய்யுமாறும் இல்லையெனில் அப்பாடசாலைகள் மன்னார் மாவட்டத்தில் இயங்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.