வடக்கு மாகாணம் யுத்த பூமி போன்று இராணுவமயமாக்கப்பட்டுள்ளது – சிறிதரன்

தென்னிலங்கை குண்டுத் தாக்குதல்களின் பின்னர், வடக்கு மாகாணம் யுத்த பூமி போன்று இராணுவமயமாக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “தமிழ் மக்கள் மிகவும் ஆபத்தான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். தென்னிலங்கை குண்டுத் தாக்குதலின் பின்னர், வடக்கு மாகாணம் யுத்த பூமி போன்று இராணுவமயமாக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் திறந்தவெளிச் சிறைச்சாலையில் தமிழர்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். அந்த செயற்பாடுகளை மாற்றி, வெளிப்படையாகவே இராணுவம் தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருப்பது, தமிழர்கள் இன்னுமொரு யுத்த சூழலிற்குள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதை மிகப் பாரியளவில் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் என்பது ஒரு புறமாக இருந்தாலும், குறிப்பாக தமிழர்கள் மீதே இராணுவத்தினரும், அரச படைகளின் பார்வைகளும் காணப்படுகின்றன. இந்த செயற்பாடுகள் தமிழர்களை பயந்த சூழலில் வைத்துக்கொள்வதற்கான எண்ணப்பாட்டை தெளிவாக காட்டுகின்றன” என மேலும் தெரிவித்துள்ளார்.