வடக்கு மக்களின் பிரச்சினைக்கு உடன் தீர்வு – ஆளுநரின் அதிரடி நடவடிக்கை

வடக்கு மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அனைத்து துறை அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் பிரச்சினைகளில் நேரடியாக தலையிட்டே அவர் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் உடனடி தீர்வுகளை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த க.வி.விக்னேஸ்வரன் கைதடியில் உள்ள அவருடைய அலுவலகத்தில் வாரம் தோரும் புதன்கிழமை மக்கள் சந்திப்பினை நடாத்தி வந்தார்.

மாகாண சபையின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் அச் சந்திப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வடக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் சுரேன் ராகவன் முதலமைச்சரின் அதே மக்கள் சந்திப்பினை புதன்கிழமையில் கைதடியில் நடாத்தி வருகின்றார்.

ஆளுநர் தான் தனிப்பட்ட வகையில் தனது அலுவலக அதிகாரிகளுடன் மக்கள் பிரச்சினைகளை எதிர் கொள்ளாமல் வடக்கின் கல்வி, சுகாதாரம், வீடமைப்பு ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பிரதம செயலாளர், சட்டத்துறையினர் ஆகியோருடன் இணைந்து மக்களின் பிரச்சினைகளை செவிமடுக்கின்றார்.

இதனால் மக்கள் தெரிவிக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பிரச்சினைகளுடன் வரும் மக்களை பேச வைத்து அப்பிரச்சினைகளுக்கான தீர்வினை காண்பதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இன்றும் ஏராளமான மக்கள் ஆளுநரை சந்தித்து தமது பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இதனால் பிரச்சினைகளுடன் வரும் மக்களில் பெரும்பாலானோர் தமது பிரச்சினைக்கான தீர்வினை அல்லது தீர்வுக்கான இலகு வழிகளை இனங்காணக்கூடியதாக உள்ளது.