வடக்கு, கிழக்கு, மலையகத்தில் கடும் சுகாதார நடைமுறைகளுக்கு மத்தியில் புலமைப்பரிசில் பரீட்சை!

நாடளாவிய ரீதியில் தரம் ஐந்து புலமைப்புப் பரிசில் பரீட்சை இன்று நடைபெற்றுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

இதன்படி, யாழ். மாவட்டத்தில் எட்டாயிரத்து 410 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதுடன் 94 பரீட்சை நிலையங்கள் மற்றும் 22 இணைப்பு நிலையங்களில் பரீட்சை நடைபெற்றது.

யாழ். மாவட்டத்தில் 2020 புலமைப் பரிசில் பரீட்சையில் தீவகம், யாழ்ப்பாணம், தென்மராட்சி வலயத்தில் மூவாயிரத்து 540 மாணவர்களும் வடமராட்சி மற்றும் வலிகாமம் வலயத்தில் நான்காயிரத்து 870 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

சுகாதார நடைமுறைக்கு அமைவாக பரீட்சை மண்டபங்கள் தயார்ப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 18 ஆயிரத்து 387 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்ததோடு 212 பரீட்சை மண்டபங்களில் பரீட்சை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வவுனியாவில் மூவாயிரத்து 578 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளதுடன் 48 பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெற்றுள்ளது.

அந்தவகையில் வவுனியா தெற்கு வலயத்தில் மூவாயிரத்து இரண்டு மாணவர்கள் தோற்றியதுடன் அவர்களுக்காக 34 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வடக்கு வலயத்தில் 576 மாணவர்கள் தோற்றியுள்ளதுடன் அவர்களுக்காக14 நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இம்முறை கொரோனா தாக்கத்தினை கருத்திற்கொண்டு பரீட்சை மண்டபங்களில் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக பேணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.