வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை: அமைச்சர் ஹக்கீம்

வடக்கு – கிழக்கை இணைத்து தனியான நிர்வாக அலகினை வழங்க இந்த அரசு முயற்சிக்கிறது என்ற செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை என நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டி, திகனை பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விகாரையொன்றில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கூட்டமைப்பானது நாடாளுமன்றத்தில் இந்த அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உதவியது வடக்கையும் கிழக்கையும் இணைத்து தனியான அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கவே எனும் வகையிலும் பல்வேறுபட்ட பொய்ப் பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த நாட்டில் அரசியலமைப்பில் சில மாற்றங்களை கொண்டு வர முடியுமான இடத்தில் நாங்கள் இருந்து கொண்டு சட்டமன்ற செயற்குழுவொன்றை உருவாக்கியுள்ளோம்.

அதில் எங்களது கட்சியைப்போலவே ஆளும் கட்சியினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கட்சியினர் என பலர் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த செயற்குழுவினூடாக கலந்துரையாடல் மேற்கொண்டு அரசியலமைப்பில் சில மாற்றங்களை மேற்கொண்டோம். நாடாளுமன்ற யாப்பில் கூடுதலாக எந்த திருத்தம் கொண்டு வந்தாலும் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படவேண்டும். அப்போதுதான் அது சட்டமாக அங்கீகரிக்கப்படும்” என அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.