வடக்கு கிழக்கு அபிவிருத்தி குறித்து பிரதமர் ஆலோசனை – சித்தார்த்தன்

வடக்கு கிழக்கு அபிவிருத்தி குறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எடுத்துக்கூறியதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் கூட்டமைப்பிற்கும் பிரதமருக்கும் இடையில் நேற்று (திங்கட்கிழமை) மாலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே சித்தார்த்தன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பாகவே இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார். குறிப்பாக வீடமைப்பு திட்டம், கிராம வளர்ச்சி குறித்து கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

இதன்போது அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிப்பதற்கு போதியளவு நிதி போதாமையினால், இருக்கும் நிதியைக்கொண்டு அபிவிருத்திகளை முன்னெடுக்குமாறு பிரதமர் தெரிவித்ததாக கூறினார்.

பல விடயங்கள் குழப்பமாக உள்ளதாகவும் அவைகளை தீர்ப்பதற்காக அனைவரிடமும் கலந்தாலோசித்து தன்னிடம் கூறும்படி பிரதமர் குறிப்பிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.