வடக்கு- கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை: சார்ள்ஸ்

வடக்கு- கிழக்கில் மக்கள் காணிகள், விவசாய நிலங்களில் நிலைக்கொண்டுள்ள அனைத்து இராணுவத்தினரும் வெளியேற வேண்டும். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலனாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு- கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேர வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டதாக அண்மையில் சகோதர மொழி ஊடகமொன்றில் செய்தி வெளியாகியிருந்தது.

இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) அவரை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”இராணுவ பிடியிலுள்ள காணிகள் விடுவிக்கப்படுவதில் சிறியளவு முன்னேற்றம் காணப்படுகின்ற போதிலும், மக்கள் எதிர்பார்த்த அளவில் இராணுவம் மக்களின் காணிகளில் இருந்து செல்லவில்லை.

ஏற்கனவே, 1980ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் இருந்த இராணுவ முகாம்கள் தவிர அதற்கு பின்னர் யுத்தம் காரணமாக உருவாக்கப்பட்ட இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு, மக்களின் ஜனநாயக வாழ்க்கைக்கு இடையூறற்ற வகையில் இராணுவம் வெளியேற வேண்டும்.

இது தொடர்பாக ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் கோரியுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.