வடக்கு ஆளுநரின் முதலாவது விஜயம்!

வடமாகாண ஆளுநராக பதவியேற்றுள்ள பி.எஸ்.எம்.சாள்ஸை வரவேற்கும் நிகழ்வு இன்று வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் செ.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா நகர எல்லையில் வைத்து வாகன பவனியாக புதிய ஆளுனர் அழைத்து வரப்பட்டார்.

இதனையடுத்து வவுனியா நகரசபை வாயிலில் சைவப்பிரகாச மகளீர் கல்லூரி மாணவிகள் பான்ட் இசைவாத்தியம் முழங்க அழைத்து வர வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் புதிய ஆளுநரை வரேவேற்றிருந்தார். இதனையடுத்து பொது அமைப்புக்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து மண்டபத்திற்கு அழைத்து வந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பித்திருந்தது.

வரேவேற்புரையினையும் தலைமையுரையினையும் தமிழ் விருட்சத்தின் தலைவர் செ.சந்திரகுமார் நிகழ்த்த ஆசியுரையினை நான்கு மதத்தலைவர்களும் வழங்கியிருந்தனர். இதனையடுத்து தமிழ் அறிஞர் தமிழ் அகளங்கன் சிறப்புரையாற்றியிருந்ததோடு பொது அமைப்புக்களின் சார்பில் வாழ்த்துப்பா இசைக்கப்பட்டு வாழ்த்து மடல்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

இதேவேளை ஏற்புரையினை வடமாகாணத்தின் புதிய ஆளுனர் பி.எஸ்.எம் சாள்ஸ் நிகழ்த்தியிருந்ததோடு, இந்நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.