வடக்கு அபிவிருத்திக்கு மூன்று திட்டங்கள்!

தமிழ் பேசும் மக்கள் வாழும் இடங்களில் தமிழிற்கு முன்னுரிமை வழங்கி மும்மொழிகளில் பெயர்பலகைகளை பொருத்தவுள்ளதாக வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்திற்கு விஜயம் செய்த அவர் ஊடகவியலாளர்களுடன் உரையாடுகையில் தமிழ் மக்கள் கூடிய அளவில் உள்ள பகுதிகளில் தமிழிற்கு முன்னுரிமையுடனும் சிங்கள மக்கள் உள்ள இடங்களில் சிங்களத்தை முதன்மையாக கொண்டு பெயர்பலகைகளை மும்மொழிகளிலும் பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த பெயர்பலகைகளில் உள்ள மொழிப்பிரச்சினைகளை தீர்க்க குழுவொன்றை நியமித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வடக்கின் அபிவிருத்திக்கு மூன்று அம்ச துரித திட்டங்களை வகுத்துள்ளதாக தெரிவித்த அவர் அதில் கல்வி மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் வடமாகாணசபையில் லஞ்ச ஊழல்கள் தொடர்பிலும் முறைகேடுகள் தொடர்பிலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் தான் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.