வடக்கில் 5 ஆயிரம் வீடுகளை அமைக்க நிதி ஒதுக்க முடியாது – அரசாங்கம்

ஐக்கிய நாடுகள் வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கல் நிறுவனத்தின் அபிவிருத்தி திட்டதிற்கு திறைசேரியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்திற்குப் பின்னர் இடம்பெயர்ந்தவர்களுக்கு, செங்கலினாலான 25,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஐக்கிய நாடுகள் வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கல் நிறுவனத்தால் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த திட்டத்தின் செலவிற்கு தமது திறைசேரியில் இருந்து பணம் ஒதுக்கீடு செய்ய முடியாது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், வரவிருக்கும் வரவு-செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் கொங்கிரீட்டிலான 7 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு, அரசாங்கம் 8 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. அதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள சமீபத்தில் இணைக்கப்பட்ட உள்ளூர் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து, வடக்கு மற்றும் கிழக்கில் முதற்கட்ட வீடுகளை கட்டியெழுப்ப ரவி வெதசிங்கவால் நிறுவனம் அமைக்கப்பட்டது. இது பிற்பகுதியில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் கைவிடப்பட்டது.

அந்தவகையில் தனித்தனியாக, 10,000 க்கும் மேற்பட்ட செங்கல் வீடுகளை தற்காலிகமாக அமைப்பதற்கு இடைக்கால கணக்கு அறிக்கை மூலம் பணம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு இதற்கான ஐ.நா.வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கல் நிறுவனத்தின் ஆரம்ப முயற்சியை அமைச்சரவை அங்கீகரித்தது. இருப்பினும், ஒப்பந்த கைச்சாத்து தாமதமானது.

இவ்வாரத்திற்கு முன்னதாக, பிரதமரின் அலுவலகம் இரண்டு அமைப்புகளின் தலைவர்களை அழைத்து திட்டத்திற்கான நிதிக் கருவூலத்தில் இருந்து ஒதுக்கீடு செய்ய முடியாது என்றும் இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டது.

குறிப்பாக, இந்த திட்டமானது உள்ளூர் வங்கியிலிருந்து நிதியுதவி பெறப்பட்டு மூன்று வகையாக வீடமைப்பு திட்டங்கள் உள்ளடக்கப்பட்டது. குறிப்பாக முதல் வீட்டிற்கு 1,099,500 ரூபாய் செலவாகும், இரண்டாவது 1,117,700 ரூபாயும் மூன்றாம் 1,116,800 ரூபாயும் என வகுக்கப்பட்டது.

“இவ்வாறு வேறுபட்ட வகையை அறிமுகப்படுத்தினால், அது பயனாளிகளிடையே தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் தெரிவித்திருந்தார்.

கடந்த சில வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி வீடுகளை ஆராய்ந்து வேறு ஒரு சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளனர். இந்நிலையிலேயே குறித்த அபிவிருத்தித் திட்டதிற்கு நிதியில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.