வடக்கில் வளர்ச்சிக்கான துறைசார் திட்டங்களைத் தயாரிக்க ஆளுநர் வலியுறுத்து!- விவசாயம் குறித்தும் அவதானம்

வடமாகாண வளாச்சிக்கான உரிய துறைகள் சார்பில் பொருத்தமான கொள்கைத் திட்டங்களை தாமதமின்றித் தயாரிக்குமாறு வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தேசிய கொள்கைகளிலிருந்து விலகாமல் வட மாகாண வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல் அனைத்து மாகாண அமைச்சுக்களும் துறைசார் கொள்கைகளை உருவாக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மாகாண அமைச்சுகளின் செயற்பாடுகள் தொடர்பான மாதாந்த மீளாய்வுக் கூட்டம் ஆளுநர் செயலகத்திலுள்ள மாநாட்டு மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆளுநரின் செயலாளர்கள், பிரதம செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் துறைசார் மாகாண கொள்கைள் தயாரித்தல் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றபோது ஆளுநர் தெரிவிக்கையில்,

“தேசிய கொள்கைகளிலிருந்து விலகாமல் வட மாகாண வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல் அனைத்து மாகாண அமைச்சுக்களும் துறைசார் கொள்கைகளை உருவாக்க வேண்டும். அதனடிப்படையிலேயே துறைசார் அமைச்சரவை அறிக்கையையும் தயார் செய்ய வேண்டும்.

இதனைவிடவும், மாகாணத்திலுள்ள பண்ணைகளை மேம்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். கைவிடப்பட்ட நிலங்களை ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு தற்காலிகமாக விவசாயம் செய்வதற்கு மட்டுமாக உரிய பிரதேச செயலகங்கள் ஊடாக கையளிக்க வேண்டும். மேய்ச்சல் நிலங்களையும் அதற்கான எல்லையையும் உருவாக்க வேண்டும்.

உள்நாட்டு மீன்வளத்தை அதற்குத் தொடர்புடைய ஏனைய துறைகளோடு ஒன்றிணைத்து விரிவடையச் செய்ய வேண்டும். பெண் தலைமைத்துவ மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழே காணப்படும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

பாடசாலைகளுக்குத் தேவையான தளபாட வசதிகளைச் சீர்செய்ய வேண்டும். முறையான துறைசார் பணி இடமாற்றக் கொள்கைகளை உருவாக்க வேண்டும்.

மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தகுந்த உணவு, மருந்து விநியோகம் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் ஆகியவற்றை உரிய முறையில் உடனடியாக கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனையொன்று நமது மாகாணத்தில் அமைக்க திட்டமிடலாம்” என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த கூட்டத்தில் தனியார் வேளான் நிறுவனத்தின் உதவியுடன் விவசாயத்தை இக்கால தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விரிவாக்கவும் விளைபொருள்களுக்கான சந்தைப்படுத்துதலை ஏற்படுத்தவும் கூடிய ஒத்திகைத் திட்டம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் ஒருங்கிணைந்த விவசாய மேம்பாட்டுத் திட்டத்திற்கான உத்திகள் குறித்து கவனம் செலுத்திப்பட்டது. குறிப்பாக, மாகாண வளர்ச்சிக்குத் தேவையான பயிர்களைப் பயிரிடவும் அதற்கான சந்தையை உருவாக்க வேண்டுமெனவும் ஆளுநர் கூறினார்.

மாகாணத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் விரைந்து முன்னெடுக்குமாறும் அதற்குத் தன்னாலான அனைத்து உதவிகளையும் உரிய மாகாண மற்றும் மத்திய அமைச்சுக்களிடமிருந்து பெற்றுத்தருவதாகவும் ஆளுநர் உறுதியளித்தார்.

இதற்குமுன்னர், வடக்கில் கொரோனா தொற்று மற்றும் பரவலைத்தடுக்கும் பாதுகாப்பு முறைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. அதன்பொது, மாகாணத்தில் தற்போது ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென்றும் அனைத்துவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சின் செயலாளர் ஆளுநரிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.