வடக்கில் கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் பீதியடைய வேண்டாம்!

வடக்கில் கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் பீதியடைய வேண்டாம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (வியாழக்கிழமை) தெரிவிக்கையில், “இத்தாலியிலிருந்து இன்று வருகைதந்த ஒருவரின் மனைவி தலைச்சுற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார். எனினும் வைத்தியசாலையில் இருந்தவர்கள் கொரோனா தாக்கமாக இருக்கலாம் என்ற அச்சத்தில் பீதியடைந்த போதிலும் மருத்துவ பரிசோதனையின் போது அவருக்கு அவ்வாறான எந்த ஒரு சான்றும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்பின்னர் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

எனினும் வடக்கில் கொரோனா தொற்றுவதற்குரிய சாத்தியங்கள் மிகக்குறைவு. எனவே மக்கள் பீதியடையத் தேவையில்லை. கொரோனா தொற்று உள்ளவர் ஒருவருடன் நெருக்கமாக பழகும் ஒருவருக்கே இவ்வாறு தொற்று ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

எனவே வடக்கினைப் பொறுத்த வரைக்கும் அவ்வாறு இல்லை. ஒருவருக்குக் கூட தொற்று ஏற்படவில்லை. எனவே வடக்கு மக்கள் கொரோனா தொடர்பாக அச்சமடையத் தேவையில்லை. தேவையற்ற விதத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்யவோ அல்லது பீதியடையவோ தேவையில்லை.

எனவே இது தொடர்பாக வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் போதியளவு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு யாராவது இனங்காணப்பட்டால் அதற்குரிய சிகிச்சை அளிப்பதற்கு உரிய ஏற்பாடுகள் மத்திய அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.