வடக்கில் இலங்கை கல்வி நிர்வாக சேவை அலுவலகர்களுக்கான நிலையங்களை வழங்குவதில் முறைகேடு?

2017ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டு கடந்த மூன்று மாதங்கள் பயிற்சி வழங்கி, மத்திய கல்வி அமைச்சால் வட மாகாணத்துக்கு விடுவிக்கப்பட்ட, இலங்கை கல்வி நிர்வாக சேவை மட்டுப்படுத்தப்பட்ட அலுவலகர்களுக்கான நிலையங்களை வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளது என முதலமைச்சருக்கு முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வடமாகாண கல்விச் செயலாளரிடம் முதலமைச்சர் விளக்கம் கேட்டுள்ளார்.

நாடாளாவிய ரீதியில் போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட அலுவலகர்களுக்கு நியமனங்கள் மற்றும் சேவை நிலையங்கள் வழங்கும் போது பரீட்சையில் பெற்ற புள்ளி ஒழுங்கில் தெரிவு வழங்கப்படல் வேண்டும் என நடைமுறை விதி இல 80:130 கூறப்பட்டுள்ளது.

இதை மீறி வடமாகாண கல்வி அமைச்சர், செயலாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர் முறையற்ற வகையில் தமக்கு சார்பானவர்களுக்கு பொருத்தமாக நியமனங்களை வழங்கி அலுவலர்களது திறமையையும் சேவை ஈடுபாட்டையும் கேள்விக்குறியாக்கியுள்ளனர்.

இத்தகைய மேலதிகாரிகளது தான்தோன்றித்தனமான முறைகேடான நடவடிக்கைகளே வடமாகாண கல்வி அதல பாதாளத்துக்குள் தற்போது விழுந்துள்ளமைக்கான காரணம் என கல்விச் சமூகத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்த போதும் தேர்தலின் பின்னரே மேன்முறையீட்டு சபை கூடும் என, செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

நியமனம் வழங்கியவர்களே மேன்முறையீட்டு சபையில் இருப்பின் அவர்களால் முன்னைய தவறை ஏற்று நியாயம் வழங்க முடியாது என பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.

எனவே, முதலமைச்சர் நீதியான விசாரணை குழுவை நியமித்து நியாயத்தை பெற்றுக்கொடுப்பதன் மூலம் வடமாகாண கல்வி வளர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

LEAVE A REPLY