வடக்கில் இராணுவ பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரவில்லை – மாவை சேனாதிராசா

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து வடக்கில் இராணுவ பாதுகாப்பை பலப்படுத்துமாறு தான் கோரவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, வடக்கு, கிழக்கில் இராணுவப் பாதுகாப்பை பலப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் தாம் கோரியதாக வெளியான செய்திகளை அவர் நிராகரித்துள்ளார்.

“ஐஸ்எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள, இந்த தாக்குதல்களில் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பதால், வடக்கு கிழக்கில் உள்ள மக்களைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுவதற்காக, அனைத்துலக புலனாய்வு அதிகாரிகள் சிறிலங்காவுக்கு வர முடியும் என்றே நான் கூறியிருந்தேன்.

அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, அவுஸ்ரேலியா போன்ற பல நாடுகள், தீவிரவாதத்துக்கு எதிராக போரிடுவதற்காக தமது புலனாய்வுப் பிரிவுகளை உதவிக்கு அனுப்ப விருப்பம் வெளியிட்டுள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படையினர் நிலைமைகளைக் கையாளுவது திருப்தி அளிக்கவில்லையா என்று எழுப்பிய கேள்விக்கு அவர், இதுகுறித்து பதிலளிக்க காலம் தேவைப்படுவதாக கூறி பதிலளிக்க மறுத்துள்ளார்.