வடக்கில் இந்த ஆண்டில் மாத்திரம் 400 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா மீட்பு

வடக்கில் இவ்வாண்டின் முதல் மாதத்தில் மாத்திரம் சுமார் 400 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக 111 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று காலை காங்கேசன்துறையில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கடந்த ஆண்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும், அதனோடு தொடர்புபட்ட சந்தேகநபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கேரள கஞ்சா கடத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுபடுத்தும் வகையில் விஷேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் நாட்களில் அச்சுவேலி, இளவாளை, பருத்தித்துறை, காங்கேசன்துறை ஆகிய பிரதேசங்களில் இவ்விஷேட தேடுதல் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இதன் காரணமாகவே கஞ்சா கடத்தல் அதிகளவில் இடம்பெறும் பகுதியில் உள்ள மக்களது விபரங்கள் திரட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் வடமாகாணத்தை அச்சுறுத்திய ஆவா குழுவைக் கட்டுப்படுத்த வடமாகாண மக்கள் வழங்கிய தகவல் தான் உதவியது என்று அவர் கூறியுள்ளார்.

ஆவாக்குழுவைச் சேர்ந்த அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒரு சிலரை தவிர. அவர்களையும் மிக விரைவில் கைதுசெய்வோம். வாள்வெட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகியுள்ளனர். சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறான நபர்களை மீண்டும் நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு அந்தந்த நாட்டு அரசாங்கத்திடம் கோரவுள்ளோம். இந்நடவடிக்கை பொலிஸ்மா அதிபர் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.