வடக்கிலிருந்து போதைப்பொருள் முற்றாக ஒழிக்கப்படும்: ஆளுநர் சுரேன் ராகவன்

வட.மாகாணத்திலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் என ஆளுநர் சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், நயினை நாகபூஷணி அம்மன் கோவிலுக்கு இன்று (புதன்கிழமை) விஜயம் செய்த ஆளுநர் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் நாகவிகாரையின் விகாராதிபதி மீஹகாஜதுரே விமலதேரர் மற்றும் நயினாதீவு விஹராதிபதி நமதகல பத்மகித்தி தேரர் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

குறித்த கலந்துரையாடலின்போது வடக்கு மாகாணத்தில் நிலவும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் விசேடமாக குறிப்பிட்ட விகாராதிபதிகள், இளைஞர்களைத் தவறான வழிக்கு இட்டுச்செல்லும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், வடக்கு மாகாண ஆளுநராக சுரேன் ராகவனை நியமித்தமையானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மிகச்சிறந்ததொரு தீர்மானமாவே தான் பார்ப்பதாக குறிப்பிட்ட நாகவிஹாரை விஹாராதிபதி விமலதேரர், ஆளுநருடன் இணைந்து வடக்கில் மதங்களுக்கிடையில் நல்லுறவினை கட்டியெழுப்ப ஒன்றுபட்டு செயற்பட தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நேரடிக் கண்காணிப்பில் போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதுடன், ஜனாதிபதியின் இந்த செயற்திட்டத்துடன் இணைந்து வடக்கில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

இதேவேளை, ஆளுநர் இன்று யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.