வடக்கிற்கான எதிர்கால வேலைத்திட்டம்: வவுனியாவில் முன்னாள் ஜனாதிபதி கலந்துரையாடல்

நல்லிணக்க செயலகத்தின் வட. மாகாணத்திற்கான எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கலந்துரையாடியுள்ளார்.

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி நெடுங்கேணி பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயலகத்தினால் வடக்கில் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் என்பன குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து மாறா இலுப்பை கிராம அலுவலர் பிரிவை சேர்ந்த மக்களுக்கான வாழ்வாதார கடனுதவி திட்டமும் முன்னாள் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயலகத்தின் நிதியில் அமைக்கபட்டுள்ள வன்னி அறுசுவை உணவகத்தை திறந்து வைக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதியின் வவுனியா விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.