வடகொரிய தலைவர் கிம்முடன் காதலில் விழுந்தேன் – டிரம்ப் ருசிகர பேச்சு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் எதிரிகளாக இருந்து, இப்போது நண்பர் களாக மாறி இருக்கிறார்கள்.

இருவரும் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல்முதலாக உச்சிமாநாட்டில் சந்தித்து பேசினார்கள். உலகையே வியக்க வைத்த இந்த பேச்சு வார்த்தையின்போது, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் இல்லாத பிரதேசமாக மாற்றுவதற்கு கிம் ஜாங் அன் ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக டிரம்புடன் ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டார்.

அது மட்டுமின்றி, மீண்டும் உச்சி மாநாடு நடத்தி சந்தித்துப்பேச விரும்புவதாக டிரம்புக்கு அவர் சமீபத்தில் கடிதம் எழுதினார். அதன்பேரில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிரம்பும் அறிவித்தார்.

இந்த நிலையில் வெர்ஜீனியா மாகாணத்தில் குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி டிரம்ப் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர் வடகொரிய தலைவர் கிம்முடன் தான் காதலில் விழுந்து விட்டதாக பேசியது ருசிகரமாக அமைந்தது.

இதுபற்றி அவர் இயல்பாக குறிப்பிடுகையில், “ நாங்கள் காதலில் விழுந்து விட்டோம். சரியா? அவர் எனக்கு அழகான கடிதங்கள் எழுதி இருக்கிறார். அவை அற்புதமான கடிதங்கள். நாங்கள் காதலில் விழுந்து விட்டோம்” என்று கூறி கலகலப்பை ஏற்படுத்தினார்.