லசந்த கொலை விவகாரம் – கோட்டாவுக்கு கால அவகாசம்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக பதிலளிக்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி அவருக்கு எதிர்வரும் 29ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை குறித்து கோட்டாவிடம் இழப்பீடு கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதை நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நிலையம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7ஆம் திகதி கலிபோர்னியா மாநிலத்தில் லொஸ் ஏஞ்சலிஸ் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடரப்பட்டதாகவும், குற்றம் சுமத்தப்பட்டவரிடம் அதனை உரிய முறையில் அறிவித்துள்ளதாகவும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இரண்டு சமஷ்டி சட்டங்கள் இருக்கின்றன என்றும் வெளிநாட்டில் சேதத்தை ஏற்படுத்திய குற்றம் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளானவர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதென்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ அல்லது வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு மனுவொன்றைத் தாக்கல் செய்யவோ பிரதிவாதி தரப்புக்குச் சந்தர்ப்பம் இருக்கின்றதென்றும் அவர் பதிலளிக்கவில்லை என்றால், பிரதிவாதியின்றியே வழக்கை விசாரிக்க முடியுமென்றும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குற்றவியல் வழக்குப் போன்று இந்த வழக்கில் எவருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்படாது என தெரிவித்துள்ள நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நிலையம், எனினும் நிதி இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளது.