ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மீதான வன்முறையை தடுக்க மியான்மருக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

மியான்மர் நாட்டில் ராகினே மாகாணத்தில் உள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்களா, வங்காளதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்களா என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இந்த இன மக்களுக்கு அங்குள்ள அரசு குடியுரிமை வழங்கவில்லை. அதே நேரத்தில் அவர்கள் மீது மியான்மர் அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. அந்த ரோஹிங்யா முஸ்லிம் மக்களிடையே ‘அரகன் ரோஹிங்யா சால்வேன் ஆர்மி’ (அர்சா) என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் குழு உருவானது.

இந்த கிளர்ச்சியாளர்கள் குழுவினர், கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந் தேதி அந்த நாட்டின் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து ரோஹிங்யா கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே பெரும் சண்டை மூண்டது. இந்த சண்டையின் காரணமாக அப்பாவி ரோஹிங்யா முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டனர். அவர்களும் தாக்குதலுக்கு ஆளாகினர். ராணுவமும், ராக்கின் மாகாணத்தில் வசிக்கிற புத்த மத மக்களும் தங்களுக்கு எதிராக மிகக்கடுமையான தாக்குதலை நடத்தி வருவதாகவும், தங்களது கிராமங்களை எரித்து வருவதாகவும் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் இதை மியான்மர் அரசு நிராகரித்துள்ளது. ‘‘ரோஹிங்யா பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் சண்டையிடுகிறது’’ என்று அரசு தரப்பில் கூறுகின்றனர். இந்த சண்டையில் 400 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மியான்மர் அரசு சொல்கிறது.

ரோஹிங்யா இஸ்லாமியர்கள் உயிருக்குப் பயந்து அங்கிருந்து கால்நடையாகவும், படகுகள் மூலமாகவும் வங்காளதேசத்துக்கு சென்று தஞ்சம் அடையத் தொடங்கி உள்ளனர். அங்கு சுமார் 3 லட்சம் மக்கள் சென்று அடைந்து விட்டனர். அகதிகள் விவகாரத்தில் மியான்மரில் சூ கி அரசு உலக நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளது.

அமெரிக்கா வலியுறுத்தல்

மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வன்முறையினால் இடம்பெயர்வது என்பது, அந்நாட்டு ராணுவம் பொதுமக்களை காக்கவில்லை என்பதை காட்டுகிறது என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.

“சட்டவிதிகளுக்கு மியான்மர் அதிகாரிகள் மதிப்பளிக்க வேண்டும், மியான்மர் அரசு வன்முறையை தடுக்க வேண்டும், அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் இடம்பெயர்வதை தடுக்க வேண்டும் எனவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்,” என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.

ஐ.நா. சபையை கூட்ட அழைப்பு

மியான்மர் நாட்டின் ராகினேவில் எழுந்து உள்ள “மோசமான சூழ்நிலை” தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்ட பிரிட்டன் மற்றும் சுவீடன் அழைப்பு விடுத்து உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இவ்விவகாரம் தொடர்பாக புதன்கிழமை கூட்டப்பட வேண்டும் என இருநாட்டு பிரதிநிதிகளும் வலியுறுத்தி உள்ளனர். திங்கள் கிழமை ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணைய அதிகாரி, மியான்மரில் ரோஹிங்கா இஸ்லாமியர்கள் மீதான கொடூரமான ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்ததை அடுத்து பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை தொடங்க கோரிக்கை தொடங்கி உள்ளது.

LEAVE A REPLY