ரிஷாத், ஹிஸ்புல்லா உடன் பதவி விலகவேண்டும் – ரெலோ தீர்மானம்

“அமைச்சர் ரிஷாத் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் உடனடியாகப் பதவி விலகி, நீதியான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவர்கள் விலக மறுத்தால், அவர்களை அரசு பதவி விலக்கிவிட்டு நீதியான விசாரணயை நடத்த வேண்டும். அதையும் மீறி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விடாப்பிடியாக பதவியில் இருந்தபடி நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொண்டால், அந்தப் பிரேரணையை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ அதிரடியாக முடிவு செய்திருக்கின்றது.
வவுனியாவிலுள்ள ரெலோ தலைமையகத்தில் நேற்று கட்சியின் தலைமைக்குழுக் கூட்டம் நடந்தது. இதன்போதே மேற்படி விடயம் சம்பந்தமாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரெலோ தலைமைக்குழு உறுப்பினர்கள் 24 பேரில் நேற்றைய கூட்டத்தில் பதினொரு பேர் கலந்துகொண்டனர். செல்வம் அடைக்கலநாதன், என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், கோவிந்தன் கருணாகரம், இந்திரகுமார் பிரசன்னா, விந்தன் கனகரட்ணம், அஞ்சலா, நித்தியானந்தம், வினோ நோகராதலிங்கம், குரூஸ், சுரேன் ஆகியோரே கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் ரெலோ செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா தெரிவித்தவை வருமாறு:-
“நடந்து முடிந்த மோசமான சம்பவங்கள் தொடர்பில் அமைசர் ரிஷாத் மற்றும் ஹிஸ்புல்லா மீது நாடு முழுவதிலுமிருந்து பரவலாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்விடயத்தில் நீதியான விசாரணை நடைபெற வேண்டுமானால் பதவியில் இருந்து இருவரும் விலகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் பின்னணியில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அரசியல்வாதிகளின் பின்னணியுடையவர்கள் என்ற குற்றச்சாட்டுப் பரவலாக உள்ளது. சந்தேகநபர்களை விடுவிக்க முயற்சித்தனர் என இராணுவத் தளபதியும் கூடப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ரிஷாத் பதியுதீன், ஹிஸ்புல்லா ஆகியோர் தமது பதவிகளைத் துறந்து நீதி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். அதை அவர்கள் செய்யாவிட்டால் அரசு அவர்களைப் பதவி விலக்க வேண்டும்.
அதையும் செய்யாமல், நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்வது என ரிஷாத் பதியுதீன் முடிவெடுத்தால், நம்பிக்கையில்லாப் பிரேரணையை ரெலோவின் இரண்டு எம்.பிக்களும் ஆதரித்து வாக்களிப்பது என முடிவெடுக்கப்பட்டது” – என்றார்.
நேற்றைய ரெலோ கலந்துரையாடலின் பின்னர், ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தி கட்சியின் தீர்மானம் அறிவிக்கப்பட்டது.