ரிஷாட்டிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீண்டுமொரு தடவை சமர்ப்பிப்பு!

சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினரால் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மற்றுமொரு தடவை கையளிக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்ட குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் காணப்பட்ட திகதி பிழை காரணமாக குறித்த பிரேரணையை மீண்டும் கையளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய தற்கொலைதாரிகள் உட்பட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்களுடன் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உள்ளதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அமைச்சு பதவியினை பறிப்பதற்காக அவர் மீது நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக நாடாளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக செயற்படும் அதுரலியே ரத்தன தேரர் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து குறித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை துரிதமாக கையளிக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதற்கமைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் கடந்த 15ஆம் திகதி புதன்கிழமை ஒன்றிணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடல் குறித்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அமைச்சர் ரிஷாட் பதியுதினுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு ஒன்றிணைந்த எதிரணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 64 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் மே மாதம் 16 ஆம் திகதி காலை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினரால் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் 10 காரணங்கள் குறிப்பிடப்பட்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எனினும், குறித்த அறிக்கையில் 2018ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி என, திகதி அச்சிடப்பட்டிருந்தது.

அதன்படி, குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்ட தினமாக கடந்த வருடம் குறிப்பிடப்பட்டுள்ளதால், அதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாத நிலை காணப்பட்டதால், பிழை திருத்தத்துடனான புதிய பிரேரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது.