ரிசாத்திற்கு எதிராக தமிழரசும் முடிவு!

ரிசாட் பதியுதீனிற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாகவும் வாக்களிக்க டெலோ முடிவு செய்துள்ளது.செல்வம் அடைக்கலநாதனின் வேண்டுகோளின் பேரில் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினரான கோடீஸ்வரனும் இம்முடிவுக்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது.

இதனையடுத்து தமிழரசின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரேரணையினை ஆதரித்து வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே அமைச்சர் பதவியை துறந்து நீதியான விசாரணைக்கு ரிசாட் பதியுதீன் ஒத்துழைக்க வேண்டுமென ரெலோ மற்றும் புnhளட் அமைப்புக்கள் கோரியுள்ளன.

அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் பல நடவடிக்கைகளில் தொடர்பு பட்டார் என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்து 66 நாடளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்டு சபாநாயகரிடம் கையளித்திருந்தனர். இதன் மீதான விவாதம் எதிர்வரும் 18 மற்றும் 19ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ரெலோவின் நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதன்போது அமைச்சர் தானாக முன் வந்து பதவி விலகி நீதி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அல்லது அரசு அவரை பதவி நீக்க வேண்டும். இவ்வாறு அன்றி குறித்த விடயம் நாடாளுமன்றில் எடுத்துக்கொள்ளப்படும் சமயம் ரெலோ கட்சியானது நிச்சயமாக பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களிக்கும் முடிவினை எட்டியுள்ளதாக கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இதேநேரம் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த புளொட் அமைப்பின் தலைவர் பிரேரணைக்கு சார்பாகவே வாக்களிக்கும் முடிவினை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழரசு மட்டும் தற்போது தொங்கு நிலையில் இருந்துவருகின்றது.தமிழரசின் பெரும்பாலான உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க முற்பட்டால் இரா.சம்பந்தனின் தலைமைக்கு எதிரான முதலாவது நகர்வாக இது அமையலாமென அவதானிகள் தெரிவித்துள்ளனர்.