ராமேஸ்வரத்தில் வரும் 27ம் தேதி கலாமுக்கு நினைவு மண்டப பணி துவக்கம்: மத்திய அரசு அறிவிப்பு

Daily_News_3822857141495ராமேஸ்வரத்தில் வரும் 27ம் தேதி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு நினைவு மண்டபம் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக் கர் நேற்று தெரிவித்தார். மாநிலங்களவையில் நேற்று கலாம் நினைவிடம் பற்றி திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் தேரக் ஓபிரைன் கேள்வி எழுப்பினார். இதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் பாரிக்கர் பதிலளித்து கூறியதாவது: கலாம் நினைவிடத்தை 5 ஏக்கரில் அமைக்க மத்திய அரசு விரும்புகிறது. ஆனால் 1.8 ஏக்கர் நிலம்தான் கிடைத்துள்ளது. எங்கள் முயற்சிக்கு தமிழக அரசு ஆதரவாக உள்ளது. ஏற்கனவே கிடைக்கப்பட்டுள்ள இடத்தில் நினைவிடம் அமைக்க முடிவு செய்துள்ளோம். அதற்கு வரும் 27ம் தேதி அடிக்கல் நாட்டப்படும். நினைவிடத்தின் வடிவம் இறுதி செய்யப்பட்டுள்ளது. கூடுதல் இடத்துக்காக காத்திருக்கப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே மக்களவையின் ஜீரோ நேரத்தில் நேற்று அருணாச்சலப் பிரதேச விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: மோடி அரசு ஒரு புறம், அம்பேத்கரின் 125வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. மறுபுறம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஜனநாயகத்தை கொலை செய்கிறது. காங்கிரஸ் இல்லா அரசை ஏற்படுத்த வேண்டும் என்ற கோஷத்தை எப்படியாவது செயல்படுத்த நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள். எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கு ஆட்சியை கலைத்து உங்கள் ஆட்சியை ஏற்படுத்துகிறீர்கள்.

உத்தரகாண்ட், அருணாச்சலப் பிரதேத்தில் ஆட்சியை கலைத்து, உங்கள் ஆட்சியை ஏற்படுத்தினீர்கள். அதேபோல் மணிப்பூர், இமாச்சலப் பிரதேசத்திலும் ஆட்சியை கலைக்க முயற்சித்தீர்கள். இது மக்களுக்கும், அரசியலமைப்புக்கும் நல்லதல்ல. இந்த விஷயத்தில் அரசியலமைப்பு சட்டத்தை நிலை நிறுத்திய உச்சநீதிமன்றத்துக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். அதன் உத்தரவு வரலாற்று சிறப்பு மிக்கது. அவை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும். பெரும்பான்மையே இல்லாமல், பின் வாயில் வழியாக ஆட்சியை கைப்பற்ற விரும்புகிறீர்கள். இது உங்கள் வாடிக்கையாகி விட்டது. இந்த தவறை நீங்கள் மீண்டும் செய்யாத வகையில் உச்சநீதிமன்றம் பாடம் கற்பித்துள்ளது. இவ்வாறு கார்கே பேசினார்.

105 முறை ஆட்சி கலைப்பு

மல்லிகார்ஜூன கார்கேயின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘‘உத்தரகாண்டிலும், அருணாச்சலப் பிரதேசத்திலும் காங்கிரஸ் அரசு சொந்த எம்.எல்.ஏ.க்களின் எதிர்ப்பால் கவிழந்தது. இதில் பா.ஜ.வுக்கு எந்த தொடர்பும் இல்லை. உங்கள் படகில் ஓட்டை விழுந்தால், மூழ்கித்தான் ஆக வேண்டும். அதற்கு எங்கள் மீது ஏன் குற்றம் சுமத்துகிறீர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட் அரசுகளை கலைக்கும் பழைய பழக்கத்தை வழக்கமாக கொண்ட ஒரே கட்சி காங்கிரஸ்தான். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது, மாநில அரசுகள் 105 முறை கலைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

வெப்சைட்டுகள் மீது நடவடிக்கை

மத விரோதத்தை தூண்டும் வெப்சைட்டுகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேள்வி நேரத்தில் பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘‘அல்கய்தா, ஹிஸ்புல் முஜாகிதீன், போகோகரம் போன்ற தீவிரவாத இயக்கங்கள் ஆட்களை தேர்வு செய்ய சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றன. அதேபோல் மதவிரோதத்தை தூண்டும் பிரசாரங்கள் உட்பட பல சட்டவிரோத செயல்கள் சமூக வலைதளங்கள் மூலம் நடக்கின்றன. இதனால் பல வெப்சைட்களை அரசு முடக்கியது. இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது’’ என்றார். இதன் விவரத்தை தெரிவித்த மற்றொரு உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ், ‘‘கடந்த 2013ம் ஆண்டில் 5693 சைபர் குற்றங்கள் வழங்குப்பதிவு செய்யப்பட்டன. இது கடந்த 2014ல் 9622 ஆகவும், 2015ல் 11,592 ஆகவும் அதிகரித்துள்ளது’’ என்றார்.

LEAVE A REPLY