ராஜபக்ஷக்களுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களை கட்சியிலிருந்து விலக்குங்கள்- சரத் பொன்சேகா

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ராஜபக்ஷக்களுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டவர்களை இனங்கண்டு, சஜித் பிரேமதாச அவர்களை விலக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சியில் தலைவர் தொடர்பாக நான் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன்.

கம்பஹா மாவட்டம் என்பது 18 இலட்சம் வாக்குகளைக் கொண்ட ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்திற்கு ஏதாவது பெரிதாக செய்ய வேண்டும் என அவரிடம் அழாத குறையாக கேட்டிருந்தேன்.

ஆனால், அவர் அதனை மேற்கொள்ளவில்லை. 2019 ஆம் ஆண்டு வடக்கு மற்றும் கிழக்கிற்காக 63 பில்லியன் ரூபாயை செலவழித்தார்.

ஒருவருடத்தில் இவ்வளவு பெரிய தொகையை எவ்வாறு செலவழிப்பது. இதுதொடர்பாக அடிப்படை அறிவு அவசியமாகும்.

அதிகளவிலான வாக்குகள் கிடைக்கும் மாவட்டங்களுக்கு 4 வருடங்களாக 10 பில்லியன் ரூபாயைக் கூட செலவழிக்கவில்லை.

இந்தத் தவறு மட்டுமன்றி, மத்திய வங்கியில் பிணைமுறி மோசடியும் இடம்பெற்றது.

இவைதான் எமது தோல்விக்கு வழிவகுத்தன. நாம் அடுத்தக்கட்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டுமெனில், திருடர்களை இணைத்துக் கொள்ளாமல் பயணிக்க வேண்டும்.

எமது தரப்பிலுள்ள சிலர் ராஜபக்ஷக்களுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டார்கள். இவ்வாறானவர்களை சஜித் பிரேமதாச இணங்கண்டு அவர்களை விலக்க வேண்டும்.

அப்படி செய்யாவிட்டால், மீண்டும் தோல்வியையே எம்மால் சந்திக்க நேரிடும்” என தெரிவித்துள்ளார்.