ராகுல் காந்தி ஒரு மனநோயாளி, சாக்கடை புழு; மத்திய மந்திரி சவுபே சர்ச்சை பேச்சு

பீகாரில் பக்சார் தொகுதியின் மக்களவை தொகுதி எம்.பி.யாக இருப்பவர் அஷ்வினி குமார் சவுபே (வயது 65). மத்திய சுகாதார மற்றும் குடும்பநல துறை இணை மந்திரியான இவர் பீகாரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, பிரதமர் மோடி வானம் போன்றவர். ஆனால் ராகுல் காந்தி ஒன்றும் இல்லாதவர்.

ராகுல் தன்னை சிறந்தவர், அறிவாளி, சரியானவர் என கூறி கொள்கிறார். ரபேல் ஜெட் ஒப்பந்தத்தில் மோடி ஒரு பொய்யர் என ராகுல் கூறுகிறார். அவருக்கு ஸ்கைசோபிரீனியா என்ற மனநோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த வியாதியால் பாதிப்பு அடைந்தவர் மற்றவர்களை மனநோயாளி என கூறுவர். ராகுலை மனநோய் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியை ஊழலின் தாய் என குற்றம் சாட்டியுள்ள அவர், எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி ஆனது ஊழல்களின் கூட்டணி என்றும் சாடியுள்ளார்.

தொடர்ந்து அவர், இந்தியாவுக்கு வளர்ச்சிக்குரிய ஒரு பிரதமர் தேவை. மோடியை மீண்டும் பிரதமராக்க மொத்த நாடும் ஒன்று சேரும் என்றும் அவர் கூறியுள்ளார்.