ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ், பிரதமர் மோடியின் பேச்சை குறிப்பிட்டு காங்கிரஸ் பதிலடி

குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிராக பிரதமர் மோடி கூறிய கருத்துகள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் புயலை கிளப்பியது. அப்போது இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு மாநிலங்களவையில் நிதி மந்திரி அருண் ஜெட்லி பதிலளித்து பேசினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் சில கருத்துகளை வெளியிட்டார். ‘பா.ஜனதா பொய்கள்’ என்ற பெயரில் அவர் வெளியிட்ட அந்த பதிவில், அருண் ஜெட்லியின் பெயருடன் ‘பொய்’ என்பதை குறிக்கும் ஆங்கில சொல்லையும் சேர்த்து குறிப்பிட்டு இருந்தார்.

இது பா.ஜனதாவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பா.ஜனதா எம்.பி. பூபிந்தர் யாதவ், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார். ஜெட்லியின் பெயரை வேண்டுமென்றே திரித்து எழுதியதன் மூலம் அவரை ராகுல் காந்தி அவமதித்து விட்டதாக அதில் அவர் கூறியிருந்தார்.

இந்த நோட்டீசை ஏற்றுக் கொண்ட வெங்கையா நாயுடு, ராகுல் காந்தி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று முன்தினம் நாடாளுமன்ற நிறைவு நிகழ்வின் போது அறிவித்தார்.

ராகுல் காந்தி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் என்பதால், தற்போது அந்த நோட்டீசை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு, வெங்கையா நாயுடு அனுப்பி வைத்துள்ளார். அதில் ராகுல் காந்தி உரிமை மீறலில் ஈடுபட்டதற் கான அடிப்படை ஆதாரம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி மீது ஏற்கனவே மக்களவை நெறிமுறைக்குழுவில் இதுபோன்ற புகார் மனு ஒன்று நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ராகுல் மீதான உரிமை மீறல் நோட்டீசை காங்கிரஸ் கட்சி குறை கூறியுள்ளது. ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் விவகாரத்தில் பிரதமர் மோடியின் பேச்சை குறிப்பிட்டு காங்கிரஸ் பதிலடி கொடுத்து உள்ளது. இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ராகுல் காந்தி கூறியது போன்ற ஏராளமான கருத்துகளை மத்திய மந்திரிகளும் பயன்படுத்தி உள்ளனர். இது (ராகுல் காந்தி கூறியது) உரிமை மீறலுக்கு உரியது என்றால், அவர்களின் கருத்துகளும் உரிமை மீறல் நோட்டீசை பெறும் தகுதியுடையவை ஆகும்’ என்றார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், துணை ஜனாதிபதி போன்ற அரசியல் சாசன பொறுப்புகளை வகித்த தலைவர்களுக்கு எதிராக பிரதமர் மோடியும் பல்வேறு தவறான கருத்துகளை வெளியிட்டு உள்ளார். அரசியல் கருத்துகள், டுவீட்டுகள் உரிமை மீறலுக்கு உரியவை என்றால், ஆளுங்கட்சியினரின் நிலைப்பாடுகளும் ஏராளமான நோட்டீசுகளை வரவழைக்கும் என்று கூறினார் ஆனந்த் சர்மா.

LEAVE A REPLY