ரஷ்ய விமான விபத்து:உலவும் யூகங்கள்

151031181015_kgl9268_sinai_peninsula_ap_640x360_ap_nocreditஎகிப்திலிருந்து புறப்பட்ட ரஷ்ய விமானம் ஒன்று சைனாய் பகுதியில் விழுந்து நொறுங்கி அதிலிருந்த மொத்தம் 224 பேரும்உயிரிழந்தாலும், அந்த அசம்பாவிதம் ஏன் ஏற்பட்டது என்பதற்கு இதுவரை தெளிவான காரணம் ஏதும் வெளியாகவில்லை.

ஆனால் விமானம் எப்படி நொறுங்கி விழுந்தது என்பது குறித்து பலவகையாக யூகங்களும், கருத்துக்களும் வந்துள்ளன.

இது தொடர்பிலான விசாரணைகள் எப்படிச் செல்லும், எதை மையப்படுத்தக் கூடும் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயந்திரக் கோளாறா?

இதில் முதலாவது விமானத்தில் இயந்திரக் கோளாறு இருந்ததா என்பது.

எகிப்தின் பிரதமரோ இந்தப் பேரழிவுக்கு தொழில்நுட்பக் கோளாறே முக்கியக் காரணமாக இருக்கலாம் எனக் கூறுகிறார். ஆனால் அது சரியா தவறா என்பதை விமான விபத்து வல்லுநர்களே முடிவு செய்ய வேண்டும்.

ஆனால் எகிப்தில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹொசாம் கமாலோ, அந்த விமானத்தின் எந்தப் பிரச்சினையும் இருந்ததற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என்கிறார். தொழில்நுட்பக் காரணங்களால் விமானம் அவசரமாகத் தரையிறங்க அனுமதி கேட்டது என, முன்னர் வந்த கருத்துகளுக்கு முரணாகவுள்ளது.

இதனிடையே அந்த விமானத்தின் துணை விமானி செர்ஜேய் த்ருகசெவின் மனைவி விமானத்தின் உறுதிப்பாடு குறித்து பல கேள்விகள் உள்ளன என்று அவர், ஷார்ம் எல் ஷெய்க்கை விட்டு விமானம் புறப்படுமுன், தன்னிடம் தொலைபேசியில் குறை கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

விமான நிறுவனமான , மெட்ரோஜெட், 18 வயதாகும் அந்த விமானம் பறப்பதற்கு முழுத் தகுதியுடனேயே இருந்தது என்று கூறுகிறது.

“வெளிக்காரணிகளே” விமானம் நொறுங்கி விழக் காரணம் என மெட்ரோஜெட் வலியுறுத்தி வருகிறது.
மனிதத் தவறா?

விமானத்தை ஓட்டிய விமானி என்று அறியப்படும் வலேரி நெமோவ், 12,000 மணிகளுக்கு மேலாக பறந்த அனுபவம் கொண்டவர் என்று அந்த விமான நிறுவனம் கூறுகிறது.
தமது பணியாளர்கள் மீது எவ்விதமான தவறும் இல்லை என மெட்ரோஜெட் அடித்துக் கூறுகிறது.

விமானத்தின் ஒலிக்குறிப்புகள் அடங்கிய கருப்புப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதிலிருக்கும் தகவல்கள் தெளிவான வானிலையில் பறந்த விமானத்தின் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள உதவும்.

கருப்புப் பெட்டியில் விமானிகளின் உரையாடல்கள் மற்றும் அவர்கள் இருக்கும் அறையில் ஏற்படும் ஒலிகள் பதிவாகியிருக்கும்.

கண்டெடுக்கப்பட்டுள்ள கருப்புப் பெட்டிகள் நல்ல நிலையில் உள்ளன என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாகும்.
ஏவுகணையால் தாக்கப்பட்டதா?

இந்த விமானத்தை தாங்களே வீழ்த்தியதாக ஐ எஸ் அமைப்பின் ஜிகாதிகள் கூறியுள்ளதை பாதுகாப்பு வல்லுநர்கள் சினத்துடன் மறுத்துள்ளனர்.

அந்த விமானம் நடுவானில் பிளவுண்டு நொறுங்கி விழுந்தது என ரஷ்யாவின் மூத்த விமானத்துறை வல்லுநர் விக்டர் சோரோசென்கோ கூறுகிறார்.

ஆனால், இன்ன காரணத்தினாலேயே விபத்து ஏற்பட்டது என்பதை இப்போது கூற முடியாது எனவும் அவர் எச்சரிக்கிறார்.

சைனாய் பகுதியில் செயல்படும், ஐ எஸ் அமைப்பின் கூட்டாளி அமைப்புகள் முக்கியமாக மோதிவருவது எகிப்து அரசுடன் தான் என்ற நிலையில்,இந்த விமானத்தை வீழ்த்துவதால் சர்வதேச அளவில் பெரிய எதிர்வினையைச் சந்திக்க நேரிடும் என்பதை அறிந்துள்ள அந்த அமைப்புகள், இதை ஏவுகணையால் வீழ்த்த முன்வருவார்களா எனும் கேள்வியை வல்லுநர்கள் எழுப்புகிறார்கள்.

ரஷ்யா சிரியாவில் உள்ள ஐ.எஸ் அமைப்புடன் போரிட்டுக்கொண்டிருக்கும் நிலையிலும், எகிப்தின் பலவீனமான பொருளாதாரம் சுற்றுலாப் பயணிகள் வருவதை நம்பியே இருக்கும் நிலையிலும், இரு நாடுகளுமே, இந்த மெட்ரோஜெட் விமான விபத்துக்கு தீவிரவாதம் காரணமாக இருக்கக்கூடாது என்றே நம்பும் என பிபிசியின் பாதுகாப்புத்துறை செய்தியாளர் பிராங்க் கார்டணர் கூறுகிறார்.

அப்படியென்றால் விமானம் ஏன் விழுந்து நொறுங்கியது எனும் கேள்வியும் எழவே செய்கிறது.

LEAVE A REPLY