ரஷ்யாவுடனான சந்திப்பை ரத்து செய்ய அமெரிக்கா தீர்மானம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான சந்திப்பு ரத்து செய்யப்படக்கூடும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கும், உக்ரேனுக்கும் இடையிலான கடற்படை மோதல்களின் எதிரொலியாகவே ஜனாதிபதி ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்யாவினால் உக்ரேன் கடற்படை கப்பல்கள் கைப்பற்றப்பட்டமை குறித்த முழுமையான அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஆர்ஜன்டீனாவில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டின் ஒரு அங்கமாக ரஷ்ய ஜனாதிபதியும், அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையே இவ்வார இறுதியில் சந்திப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், புட்டினுடனான சந்திப்பு ரத்து செய்யவதாகவும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு செயற்பாட்டை தான் விரும்பவில்லை என்றும், அவ்வாறான ஆக்கிரமிப்பு தேவையில்லை என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க, ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பின்போது பாதுகாப்பு, ஆயுத கட்டுப்பாடு, உக்ரேன் மற்றும் மத்திய கிழக்கு பிரச்சினைகள் ஆகிய விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.