ரவுடிகளுடன் ஜெயலலிதாவை ஒப்பிட்டு பேசியது பெரும் தவறு – இளங்கோவனுக்கு விஜயதரணி கண்டனம்

தமிழக சட்டசபையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டது.

ஜெயலலிதா படம் திறக்க தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி இதற்கு ஆதரவு தெரிவித்தார். சபாநாயகரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து பாராட்டினார்.

இது காங்கிரசார் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவுக்கு விஜயதரணி ஆதரவு தெரிவிப்பது ஏன்? அ.தி.மு.க.வில் இணையப் போகிறாரா? என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் இளங்கோவனும், விஜயதரணி செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். விஜயதரணி மீது தமிழக காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஊழல் குற்றவாளி என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்தை சட்டசபையில் திறந்து வைத்தது ஏற்புடையது அல்ல. இது சரி என்றால் ரவுடிகள் படத்தையும் சட்டசபையில் திறந்திருக்க வேண்டும் என்று கூறினார். இளங்கோவன் பேச்சு குறித்து விஜயதரணி எம்.எல்.ஏ. இன்று மாலை மலர் நிருபரிடம் கூறியதாவது:-

இளங்கோவனுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பிடிக்காது. இதுபோல என்னையும் அவருக்கு பிடிக்காது. எனவே தான் அவர் இவ்வாறு பேசி உள்ளார். இளங்கோவன் தேவைக்கேற்ப பேசுபவர். இப்போது அவர் பேசி இருக்கும் கருத்துக்கள் இளங்கோவனின் தன்மையை காட்டுகிறது. ஒரு முன்னாள் முதல்-அமைச்சருடன், ரவுடிகளை ஒப்பிட்டு பேசுவது பெரும் தவறு. இதனை நான் கண்டிக்கிறேன்.

ஜெயலலிதா உறுதியும், கம்பீரமும் கொண்ட பெண் தலைவர். அவரது படம் சட்டசபையில் இடம் பெறுவது பெண் என்ற முறையில் எனக்கு பிடித்திருக்கிறது. எனவேதான் நான் பாராட்டினேன்.

சட்டசபையில் நான் ஒருமுறை பேசும்போது, பதில் அளித்த ஜெயலலிதா தனக்கு இந்திராகாந்தியை பிடிக்கும் என்றும், அரசியல் வாழ்க்கையில் அவரைதான் ரோல் மாடலாக வைத்துள்ளேன் எனவும் கூறினார். இதைக்கேட்டு காங்கிரசார் நெகிழ்ந்தனர்.

அது மட்டுமல்ல ஜெயலலிதாவின் மேஜையின் மீது இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி படங்கள் இருக்கும். மோடி வந்தபோது கூட அந்த படங்களை ஜெயலலிதா அப்புறப்படுத்தவில்லை. அந்த அளவுக்கு தைரியமும், துணிச்சலும் நிறைந்தவர்.

எனவேதான் ஜெயலலிதா இறந்தபோது ராகுல்காந்தி நேரில் வந்து மரியாதை செலுத்தினார். இறுதிச்சடங்கு முடியும் வரை உடன் இருந்தார். ராகுல்காந்தியால் மதிக்கப்பட்ட ஜெயலலிதாவை நான், பாராட்டியதில் தவறில்லை.

ராகுல்காந்தி காங்கிரசின் தலைவராக பொறுப்பேற்ற பின்பு வெற்றிகளை குவித்து வருகிறார். ராஜஸ்தான் மாநில இடைத்தேர்தலிலும், குஜராத் சட்டசபை தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி உள்ளார். அவரது தலைமையில் காங்கிரஸ் இன்னும் பல சாதனைகளை புரியும். அதில் சந்தேகமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY