ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு எதிராக சாட்சிகள் தேவையாம்?

பதினொரு தமிழ் இளைஞர்களைக் கடத்தி, காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நேவி சம்பத் என்றழைக்கப்படும் லெப்டினன்ட் கமாண்டர் சம்பத் முணசிங்க தலைமறைவாகியிருப்பதற்காக ஒத்துழைத்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாதுகாப்பு படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, ஏப்ரல் மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, கோட்டை நீதவான் பிரியந்த லியனகேவின் முன்னிலையில், நேற்று (16) விசாரணைக்கு எடுத்து​கொள்ளப்பட்டபோதே, பதில் நீதவான் பிரியந்த லியனகே மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். மேற்படி வழக்கில், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்ன, நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகியிருந்தார்.
இதேவேளை, இந்தக் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு ஒத்துழைத்தமை மற்றும் சாட்சியை அச்சுறுத்தியமை ஆகியன தொடர்பிலான அலைபேசி உரையாடல் குறித்து விசேடமான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
இந்த விசாரணையில் முன்னேற்றம் கிடைக்கும் வரையிலும் மேற்படி வழக்கை ஒத்திவைக்குமாறு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, வழக்கை ஒத்திவைக்கும் கட்டளையை நீதவான் பிறப்பித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பிலான வழக்கின் பிரதான சாட்சியாளராக கலகமகே லக்சிறி என்பவரை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் ரவீந்திர விஜேகுணரத்னவிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான அனுமதியையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு, நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இதேவேளை, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்ன, கடற்படைத் தளபதியாக பதவிவகித்த காலத்தில், அவருக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வமான வாசஸ்தலத்தை அவர், இன்னும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றார் என்றும் அந்த வாசஸ்தலத்தை இதுவரையிலும் அவர் மீளவும் ஒப்படைக்கவில்லையென, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் ​கொண்டுவந்தனர்.